க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தால் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளோம், சாதகமான பதில் கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு - இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 5, 2025

க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தால் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளோம், சாதகமான பதில் கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு - இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

'க்ளீன் ஸ்ரீ லங்கா' திட்டத்தால் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளார்கள். பதில் பொலிஸ்மா அதிபருடன் இவ்வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டை தூய்மைப்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு 'க்ளீன் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சேவையில் ஈடுபடும் பேருந்துகளை இடைநிறுத்தி பொலிஸார் சோதனை செய்கிறார்கள். க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் என்னவென்பதை முதலில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பேருந்தின் முன் மற்றும் பின் பக்க கண்ணாடிகளில் அலங்காரங்கள் மற்றும் பொருத்தமற்ற ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை இணைப்பது தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் இந்த சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு பொலிஸார் முன்னெடுக்கும் செயற்பாடுகளினால் பஸ் உரிமையாளர்கள், சாரிதிகள் மற்றும் நடத்துனர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்த வாரம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தனர்.

பொலிஸாரின் செயற்பாடுகளினால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் இந்த வாரம் பதில் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். நாம் முன்வைக்கும் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் பணிப்புறணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

பொலிஸார் சிவில் உடையில் பஸ்ஸில் பயணித்தவாறு பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. ஆகவே பொலிஸார் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும்.

தனியார் பஸ் சாரதிகள் கவனயீனமாக செயற்படுவதால் வாகன விபத்து இடம்பெறுவதாக குறிப்பிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டில் போக்குவரத்து சபைக்கு சொந்தமாக 13500 முதல் 14000 பஸ்கள் உள்ளன. தனியார் துறையில் 13500 பஸ்கள் உள்ளன. ஆகவே தனியார் பேருந்துகளை காட்டிலும் அரச பேருந்துகளே அதிகளவில் விபத்துக்குள்ளாகுகின்றன என்றார்.

No comments:

Post a Comment