மத்திய மாகாண சபைக்கு உட்பட்ட கண்டி மாவட்டத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், தொழிற்சங்கங்களின் முறையற்ற தலையீடுகள் காரணமாக தற்போதுள்ள ஊழியர்களை சமச்சீர் முறையில் வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.
சில தாதியர் சங்கங்களின் தலையீடு காரணமாக குறிப்பாக தாதியர் சேவையில் முறையான இடமாற்றங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்தியர் சேனக தலகல இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக கண்டி மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் தாதிமார்கள் மேலதிகமாக காணப்படுகின்ற போதிலும் பல வைத்தியசாலைகளில் ஒரு தாதி கூட இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி, முறையான இடமாற்ற முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டால், எந்தவொரு தொழில்சார் சங்கமும் முறையற்ற வகையில் தலையிட முடியாது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கம் அவ்வாறான தலையீடுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
தொழிற்சங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களின் நலன் மற்றும் உரிமைகளுக்காக தொழிற்சங்கங்கள் செயற்படுவது சாதாரண விடயம். எனினும் அரச சேவைக்கு இடையூறாக ஊழியர்களின் இடமாற்றத்தை நிறுத்துவதற்கு தொழிற்சங்கங்களுக்கு உரிமையில்லை என பிரதி அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
கண்டி மாவட்டத்தில் 76 வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுவதுடன் ஒரு வைத்தியர் பணி புரியும் சில உள்ளுர் வைத்தியசாலைகளில் அந்த வைத்தியர் விடுமுறையில் செல்லும்போது அங்கு, வைத்தியர் இல்லாத பிரச்சினை காணப்படுகின்றது என மத்திய மாகாண சுகாதார செயலாளர் ஜகத் அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment