(எம்.மனோசித்ரா)
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்தபோது, அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து மனிதாபிமான ரீதியில் செயற்பட்டது. ஆனால், இந்த அரசாங்கம் மீண்டும் அவர்களை அந்த நாட்டுக்கே அனுப்புவதற்கு முயற்சிக்கிறது. அவ்வாறு செய்தால் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கம் சில விடயங்களை கூறி பின்னர் அவை விமர்சனத்துக்கு உள்ளான பின்னர் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து இவ்வாறான நிலைமையையே ஏற்படுத்தியிருக்கிறது. நன்கொடை வேண்டாமெனில் கடனையும் வேண்டாமெனக் கூறலாம் அல்லவா? நாடு பொருளாதார நெருக்கடியிலுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது பொறுத்தமற்றது.
மறுபுறம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுவதை ஜே.வி.பி. எதிர்ப்பதும், ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி மறுப்பதும் தற்போது வாடிக்கையாகியுள்ளது.
தற்போது அண்மையில் நாட்டை வந்தடைந்த ரோஹிங்யா அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எமது நாடு தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் அவப்பெயர் ஏற்படக்கூடிய கருத்தினையே அவர் முன்வைத்திருக்கின்றார்.
மியன்மார் அண்மைக்காலமாக இன, மத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடாகும். றோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் அவதானம் செலுத்தியுள்ளது. அந்த இனத்தவர்களே தற்போது எமது நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவ்வாறான மக்களை மீண்டும் அந்த நாட்டுக்கே அனுப்ப வேண்டும் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
அவ்வாறெனில் சர்வதேச மனித உரிமை சட்ட திட்டங்களை இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லையா? இலங்கையில் ஜே.வி.பி. கலவரத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு வெளியேறினர். அதேபோன்று வடக்கு, கிழக்கு யுத்த காலத்திலும் மக்கள் நாட்டை விட்டுச் சென்றனர்.
ஆனால் அவர்கள் அகதிகளாக சென்ற நாடுகள் அவர்களை கைவிடவில்லை. மாறாக அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். அவர்களிடம்தான் தேர்தல் காலங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒத்துழைப்பு கோரினார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இதேபோன்று ரோஹிங்யா இனத்தவர்கள் இலங்கையில் தஞ்சமடைந்தனர். அவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு இடமளித்து, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து அவர்களை பொறுப்பேற்கக் கூடிய நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை அந்த அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூட இவ்வாறு மனசாட்சியுடன் செயற்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் அவ்வாறு சிந்திக்கவில்லை. எனவே அவர்களை மீண்டும் அந்த நாட்டுக்கு அனுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment