(எம்.வை.எம்.சியாம்)
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற யாழ். வல்வெட்டித்துறை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும்தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 30 வருடங்கள் கடந்துள்ளன. எனினும் எமது மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. இந்த மக்கள் பெரும் துன்பத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நாட்டில் வறுமைக்கோட்டில் வாழும் மக்களை கொண்ட மாகாணமாக வட மாகாணம் உள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.
அன்று எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்த மக்களை மீட்டெடுப்பதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மக்களுக்கு வளமான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதே தனக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு எனக் கூறியிருந்தார்.
வட பகுதியில் தற்போது போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. வாள் வெட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளதாக தேர்தலுக்கு முன்னதாக என்னை சந்தித்த மக்கள் கூறினர். இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தருமாறு கோரினார்கள்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அதுவே எமது கனவாகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இரண்டு பிரதான தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். எமக்கு வாக்களிக்காத மக்களையும் இதில் இணைத்துக் கொண்டு ஒன்றாக பயணிக்க நாம் தயாராகவே உள்ளோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என்றார்.
No comments:
Post a Comment