மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தில் காணப்படுகின்ற மோசடிகள் குறித்து விசேட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தயாராகி வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில், மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை மையப்படுத்தி இந்திய அரசாங்கம் 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு 2016 இல் நிதியுதவியை அளித்திருந்தது.
அந்த வகையில் 2300 வரையிலான வீடுகள் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஏனையவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த வீடுகளின் கூரைகள் உள்ளிட்ட அடிப்படையான விடயங்களின் தரம் சம்பந்தமாக பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.
தற்போது அந்த வீடுகளில் வசிப்பவர்கள் லயன்களில் வாழ்ந்ததை விடவும் மோசமான வாழ்க்கையை வாழும் நிலைமையே காணப்படுகின்றது.
ஆகவே, குறித்த வீடொன்றை நிர்மணிப்பதற்காக 950000 ரூபா செலவழிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தச் செலவீனத்துக்குரிய தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் பிரச்சிகைள் காணப்படுவதாக மக்கள் எமக்கு முறைப்பாடுகளை அளித்துள்ளனர். அவர்கள் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றார்கள்.
அந்த வகையில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் நிலைமைகள், நிர்ணமானிக்க பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்களின் தரகள் உள்ளிட்ட ஒப்பந்தக்காரர்கள் ஆகிய அனைத்து விடயங்களையும் விசேட விசாரணையொன்றுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
அதேபோன்று, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 2017ஆம் ஆண்டு இலங்கைக்கான விஜயத்தின்போது 10 ஆயிரம் விடுகளை மலையக மக்களுக்காக நிர்மாணிப்பதற்கு நன்கொடையளிப்பதாக அறிவித்திருந்தார்.
அதற்கமைவாக 45 தோட்டங்களை மையப்படுத்தி 1300 வீடுகள் முதற்கட்டத்தில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. எனினும் பயனாளிகள் தெரிவில் அரசியல் ரீதியான தலையீடுகள் மற்றும் பக்கச்சார்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆகவே அந்த வீட்டுத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு உள்ளிட்ட விடயங்களையும் மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.
No comments:
Post a Comment