இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவராக பதவியேற்றார் வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா - News View

About Us

About Us

Breaking

Monday, January 13, 2025

இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவராக பதவியேற்றார் வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா

(செ.சுபதர்ஷனி)

இலங்கை மருத்துவ சங்கத்தின் 131 ஆவது தலைவராக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா பதவியேற்றுள்ளார்.

நாட்டின் தலை சிறந்த மற்றும் பழமையான வைத்தியர் சங்கமாக கருதப்படும் இலங்கை மருத்துவ சங்க புதிய தலைவர் பதவியேற்பு நிகழ்வு 12 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா, இலங்கை மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரமவின் முன்னிலையில் புதிய தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

மேலும் 2025 ஆம் ஆண்டிற்குரிய "வாழ்நாள் முழுவதும் சுகாதார நியாயத்தை வலுப்படுத்துதல்” எனும் கருப்பொருளும் புதிய தலைவரினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் புதிய தலைவர் விசேட வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா கருத்து தெரிவிக்கையில், சமீபத்திய சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களை எதிர்கொண்டு, புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதல் வயதான பிரஜைகள் வரை சுகாதார சமத்துவத்தை உறுதிப்படுத்த சுகாதார அணுகுமுறைகளுக்கு இடமளித்தல், சமூகத்தை சுகாதார வலுவூட்டலை நோக்கி இட்டுச் செல்வதே இவ்வருட கருப்பொருளின் முக்கிய நோக்கமாகும்.

உலகளாவிய காலநிலை மாற்றம் சகல சுகாதார அமைப்பினதும் ஸ்திரத்தன்மைக்கு சவாலாக உள்ளது. ஆகையால் மீள்திறன் கொண்ட சுகாதார அமைப்பை உருவாக்குதல் மற்றும் சுகாதார அமைப்பின் முன்னேற்றத்திற்காக அதிநவீன நுண்ணறிவு உள்ளிட்ட புதிய விடயங்களை பயன்படுத்தல் என்பன இலங்கை மருத்துவ சங்கத்தின் முயற்சியில் 2025 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய அணுகுமுறைக்கான கதவுகளைத் திறக்கும் இந்த முன்னோடித் திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment