பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் ! வேன் சாரதி கைது ! - News View

About Us

About Us

Breaking

Sunday, January 12, 2025

பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் ! வேன் சாரதி கைது !

கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று (11) பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வேன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் சாரதி இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தவுலகல பொலிஸ் பிரிவில் மாணவி ஒருவரை வேனில் வந்த சிலர் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுக்காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில், இது தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் தவுலகல பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (11) இடம்பெற்றுள்ளதுடன், மாணவி ஹன்தெஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தனது தோழியுடன் தனியார் வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது வேனில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (11) நடந்த இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்சனைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றுள்ளமை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், மாணவியை கண்டுபிடித்து சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தவுலகல, ஹன்தெஸ்ஸ பகுதியில் குறித்த மாணவி தற்காலிகமாக வசித்து வந்த நிலையில், நேற்று (11) காலை தனது தோழியுடன் தனியார் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தவுலகல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வேன் நேற்று பொலன்னறுவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலன்னறுவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, இன்று (12) கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வேனின் சாரதி தவுலகல பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்திற்குரிய வேனின் சாரதி, கம்பளை, கஹடபிட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, 19 வயதான மாணவியைக் கடத்திச் சென்ற சந்தேகநபரான இளைஞன், முதலில் 5 மில்லியன் ரூபாயை கப்பமாக கோரியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அவர் மாணவியின் தந்தைக்குச் சொந்தமான வாகனத்தை கோரி, 200,000 ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, மாணவியின் தந்தை 50,000 ரூபாவை சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்ட மாணவியை கண்டுபிடித்து, சந்தேகநபரை கைது செய்ய 03 பொலிஸ் குழுக்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

No comments:

Post a Comment