போர் நிறுத்த விதிகளை மீறியதாக ஹமாஸ் மீது குற்றம் சாட்டிய இஸ்ரேல் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர் தமது வீடுகளுக்கு திரும்புவதை தடுத்து வருகிறது.
இவ்வாறு வடக்குக்கு செல்ல முயன்ற பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமை (25) பணயக் கைதிகளாக இருந்த நான்கு இஸ்ரேலிய பெண் படையினரை விடுவித்தது. இதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 200 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த கைதிகள் பரிமாற்றத்தில் இஸ்ரேலிய சிவிலியனான அர்பல் யஹுத் உள்ளக்கப்படாதது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெண் பணயக் கைதியை விடுவிக்க திட்டமிடப்பட்டபோதும் அது இடம்பெறவில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் யஹுத் உயிருடன் இருப்பதாகவும் அவர் அடுத்த வாரம் விடுவிக்கப்படுவார் என்றும் ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேல் தனது துருப்புகளை காசாவில் இருந்து வாபஸ் பெறுவதை தாமதப்படுத்தி இருப்பதோடு பலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்புவதையும் தடுத்துள்ளது.
இதனால் கடந்த சனிக்கிழமை மாலையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. நடைபாதையாக வடக்கு காசாவுக்கு திரும்பும் நோக்கத்துடன் தமது உடைமைகளுடன் வந்த பலஸ்தீனர்கள், வீதி மூடப்பட்டு இஸ்ரேலிய டாங்கிகள் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதை கண்டனர்.
தமது வீடுகளுக்கு திரும்பும் நோக்கத்துடன் மத்திய காசாவில் அல் ரஷீத் வீதியை ஒட்டி மக்கள் திரண்டுள்ளனர். அவர்களை நோக்கி இஸ்ரேலிய படை சூடு நடத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘எனது வீடு அழிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அந்த இடிபாடுகளின் மேல் கூடாரம் அமைக்கவுள்ளேன். எனக்கு அங்கு திரும்ப வேண்டும்’ என்று வடக்கு காசாவுக்கு திரும்புவதற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவரான முஹம்மது இமாத் அல் தீன், தொலைபேசி வழியே பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை ஒரு வாரத்தை கடந்திருக்கும் நிலையில் எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி வடக்கு காசா மற்றும் காசாவின் எஞ்சிய பகுதிகளை துண்டிக்கும் வகையில் இஸ்ரேலிய படை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஏழு கிலோ மீற்றர் நிலப்பகுதியான நட்சரிம் தாழ்வாரம் வழியாக பலஸ்தீனர்கள் வடக்கிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
இதில் தமது வீட்டுக்கு திரும்பி கணவருடன் இணையும் எதிர்பார்ப்புடன் லுப்னா நாசர் என்ற பெண் தனது இரு மகள்கள் மற்றும் மகனுடன் கழுதை வண்டி ஒன்றில் பயணித்த போதும் வடக்கு காசாவுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகியுள்ளார்.
‘இஸ்ரேலிய சோதனைச் சாவடிக்கு நெருக்கமாக நான் இங்கேயே தங்கி இருப்பேன். எனது மகள்கள் தந்தையை பார்க்க பல மாதங்களாக காத்திருக்கின்றனர். காசாவுக்கு முதலாமவராக திரும்ப நான் விரும்புகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டார்.
காசா போர் நிறுத்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவே வடக்கு காசாவுக்கு பலஸ்தீனர்கள் திரும்புவது பார்க்கப்படுகிறது. இவ்வாறு சுமார் 650,000 இடம்பெயர்ந்த மக்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப எதிர்பார்த்திருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்புவதை உறுதி செய்யும் போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதில் கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்த பணியில் ஈடுபட்டது.
இந்நிலையில் யஹுத் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை ஹமாஸ் தர வேண்டும் என இஸ்ரேல் மத்தியஸ்தர்களிடம் கேட்டுள்ளது.
முன்னதாக காசா நகரில் அமைக்கப்பட்ட மேடை ஒன்றில் பெருந்திரளான மக்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய ஹமாஸ் போராளிகளுக்கு மத்தியிலேயே நான்கு பணயக் கைதிகளும் செங்சிலுவை சங்கத்திடம் கையளிக்கப்பட்டனர்.
இதன்போது அந்த பணயக் கைதிகள் புன்னகைத்த முகத்துடன் மேடையில் இருந்து கூட்டத்தினருக்கு கையசைப்பதை காண முடிந்தது.
மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலின் ஒபர் இராணுவ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகள் பஸ் வண்டிகளில் வெளியேறிச் சென்றனர். 200 கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேலிய சிறைச் சேவை தெரிவித்தது.
இந்த விடுதலையை ஒட்டி டெல் அவிவில் இஸ்ரேலியர்களும் ரமல்லாவில் பலஸ்தீனர்களும் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பலஸ்தீனர்களில் போராளிகளும் இருப்பதோடு சிலர் ஆயுள் தண்டனை அனுபவிப்பவர்களாவர்.
இதில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தமது வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படாத நிலையில் சுமார் 70 பேர் எகிப்துக்கு நாடு கடத்தப்படுவதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்து அவர்கள் துருக்கி, கட்டார் அல்லது அல்ஜீரியா என மற்றொரு நாட்டுக்கு செல்லவுள்ளனர். மேலும் 16 பேர் காசாவுக்கு செல்லவிருப்பதோடு எஞ்சியவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு சென்றுள்ளனர்.
ஆறு வாரங்களைக் கொண்ட முதல் கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி பெண்கள், சிறுவர்கள், வயதானோர், சுகவீனமுற்றோரும் மற்றும் காயமடைந்த 33 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கவிருப்பதோடு அதற்கு பதில் ஒவ்வொரு சிவில் பணயக் கைதிக்கும் 30 பலஸ்தீன கைதிகளையும் மற்றும் ஒவ்வொரு படையினருக்கும் 50 பலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் விடுவிக்கும்.
இதேவேளை இஸ்ரேலியப் படை தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் தனது படை நடவடிக்கையை முன்னெடுத்தது.
இந்தத் தாக்குதல் ஆரம்பித்தது தொடக்கம் இதுவரை 15 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பலரும் காயமடைந்து மற்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெனின் நகர் மற்றும் அகதி முகாமில் வீதிகள், வீடுகள் உட்பட உட்கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் கடந்த சனிக்கிழமை இரவு 2 வயதான லைலா அல் காதிப் என்ற சிறுமி இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரியால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
ஜெனினில் உள்ள அரச வைத்தியசாலையையும் இஸ்ரேலிய படை தொடர்ந்து முடக்கியுள்ளது.
ஜெனினுக்கு மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் வாகனங்கள் நுழைந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களில் அங்குள்ள முகாமில் இருக்கும் பல வீடுகளையும் இஸ்ரேலிய படை தீ வைத்து அழித்தருப்பதாகவும் வெடிப்புச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டு வருவதாகவும் பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே காசாவை சுத்தப்படுத்துவதற்காக எகிப்து மற்றும் ஜோர்தான் நாடுகள் அங்கிருந்து மேலும் பலஸ்தீனர்களை ஏற்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலியுறுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜோர்தானின் இரண்டாவது அப்துல்லா மன்னருடன் பேசியதாகவும் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசியுடன் பேசவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment