மாற்றத்தை நோக்கி பயணிக்கையில் எதிர்ப்புக்கள் தோற்றம் பெறுவது இயல்பானதே : க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் தொடர்பில் இரு நாள் விசேட விவாதம் நடத்த தீர்மானம் - பிரதமர் ஹரிணி - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 8, 2025

மாற்றத்தை நோக்கி பயணிக்கையில் எதிர்ப்புக்கள் தோற்றம் பெறுவது இயல்பானதே : க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் தொடர்பில் இரு நாள் விசேட விவாதம் நடத்த தீர்மானம் - பிரதமர் ஹரிணி

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புதிதாக சட்டமியற்றி க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தை அமுல்படுத்த முயற்சிக்கவில்லை. நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதற்கு சமூக கட்டமைப்பில் இருந்து மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு ஒட்டு மொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாற்றத்தை நோக்கி பயணிக்கையில் எதிர்ப்புக்கள் தோற்றம் பெறுவது இயல்பானதே. க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் தொடர்பில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற அமர்வின்போது பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி வேளையின்போது ஆளும் தரப்பின் உறுப்பினர் அஸித நிரோசன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டம் ஊடாக மக்களை ஊக்கப்படுத்தல் அதன் ஊடாக சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவது பிரதான இலக்காகும். பொருளாதார ரீதியில் மாத்திரம் வீழ்ச்சியடையவில்லை. சமூக கட்டமைப்பிலும் வீழ்ச்சியடைந்துள்ளோம்.

மக்கள் மத்தியில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்வதற்காகவே 18 உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது அரச கட்டமைப்பின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தனியார் தரப்பினரும் தன்னிச்சையான முறையில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது பல சவால்களையும் ஏற்றுக் கொண்டுள்ளோம். க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்துக்கு எதிரான கருத்துக்களை குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துiழைப்பு வழங்க வேண்டும். என்பதை வலியுறுத்துகிறோம்.

எதிர்ப்புக்களுக்காக மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை புறக்கணிக்க முடியாது. ஆகவே க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். புதிய சட்டங்களை இயற்றி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.

மக்களின் எண்ணங்களில் இருந்து மாற்றம் தோற்றம் பெற வேண்டும். க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் வெற்றி பெற்றவுடன் தற்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெளிவு பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஏனெனில் ஒரு தரப்பினர் தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

ஆகவே க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் விசேட விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment