இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே இடம்பெற்று வரும் யுத்த நிறுத்த நடவடிக்கையின் மற்றுமொரு கட்டமாக, இன்று (01) 183 பலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். இது காசாவில் நடைபெறும் நான்காவது கைதி பரிமாற்ற நிகழ்வாகும்.
ஹமாஸ் வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேலிய பிணைக் கைதிகளான Ofer Kalderon, Keith Siegel, Yarden Bibas ஆகிய மூவர் விடுவிக்கப்பட உள்ளனர்.
இதேநேரம், மருத்துவ சிகிச்சை அவசியமான 50 பலஸ்தீனர்கள் எகிப்து ஊடாக செல்லக்கூடிய ரஃபா வாயில் வழியாக காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகள் பாரிய இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்தும் நடத்தி வருவதோடு, ஜெனின் மற்றும் துல்கரம் அகதி முகாம்கள் உள்ளிட்ட ஏனைய பலஸ்தீன சமூகங்களை இலக்காகக் கொண்ட இந்த நடவடிக்கையில், கடந்த வாரம் முதல் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 07 முதல் இஸ்ரேலின் காசா மீதான போரில், குறைந்தது 47,460 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, 111,580 பேர் காயமடைந்துள்ளனர்.
அதே தினம் முதல் ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டு, 200 இற்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment