(எம்.ஆர்.எம்.வசீம்)
கட்சி தொகுதி அமைப்பாளர்களின் பதவி விலகல் அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். ஒரு சில நாட்களில் அது சரியாகும். இதற்கு கட்சி காரணமில்லை. தேர்தல் முறையே காரணமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பட்டியல் மூலம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஆசனங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாகவே ஒரு சில தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளனர்.
தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்ட முதல் இரண்டு பேரை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கட்சி, தொகுதி அமைப்பாளர்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தது. அதேபோன்று பெண்களை நியமிப்பது தொடர்பாகவும் சில அளவுகோள்களை வழங்கி இருந்தது. அதன் பிரகாரம் அதிகமான இடங்களில் அவ்வாறு செயற்பட்டிருந்தது.
ஜனநாயகம் என்பது மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றவர்களை தெரிவு செய்வதாகும். என்றாலும் இந்த முறைமையை 100 வீதம் பின்பற்றும்போது தொகுதி அமைப்பாளர்கள் பல்வேறு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தொகுதி அமைப்பாளர் என்ற வகையில் அந்த பிரச்சினையை நானும் எதிர்கொள்கிறேன்.
இந்த தேர்தல் முறையினால் எனக்கு விருப்பமான, வினைத்திரன் மிக்க பலரை தெரிவு செய்துகொள்ள முடியாமல் போயிருக்கிறது. தேர்தல் ஒன்று முடிவடைந்த பின்னர் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தெரிவு செய்யும்போது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமானதாகும்.
அதனால் பதவி விலக தீர்மானித்திருக்கும் தொகுதி அமைப்பாளர்கள் இந்த நேரத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. அவர்கள் இந்த கட்சிக்காக ஆரம்ப காலத்தில் இருந்து பாடுபட்டவர்கள். தேர்தல் சட்டத்தில் இருக்கும் பிழையான நடவடிக்கையே இதற்கு காரணமாகும். அதனால் இது கட்சியின் தவறு அல்ல. தொகுதி அமைப்பாளர்களின் மன ஆதங்கமும் நியாயமானதாகும்.
எனவே தொகுதி அமைப்பாளர்களின் பதவி விலகல், அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தில் எடுத்த தீர்மானமாகும். அது ஒரு சில நாட்களில் சரியாகும். அதனால் அதுதொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றார்.
No comments:
Post a Comment