(லியோ நிரோஷ தர்ஷன்)
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு போலந்து வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 11 பேர் கொண்ட உயர்மட்ட குழு புதன்கிழமை (28) இலங்கை வருகிறது.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடல்களில் இந்த உயர்மட்ட குழு ஈடுப்பட உள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மீண்டும் புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்டு கொழும்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.
வர்த்தகம், புதிய ஒத்துழைப்புத் துறைகள், போலந்து மற்றும் இலங்கை கடல் துறைமுகங்களுக்கு இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உட்பட பல்வேறு துறைகள் குறித்து போலாந்து வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளது.
ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க நாடு என்ற வகையில் போலந்து வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இலங்கை விஜயம் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.
அத்துடன் ஐரோப்பா மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமைக்கு உள்ள சவால்கள் குறித்தும் இலங்கை விஜயத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
அதேபோன்று இலங்கை மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகளுமே பரஸ்பர மரியாதை அடிப்படையில் நீண்டகால மற்றும் நட்பு உறவுகளைப் பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment