கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தனது கட்சி சார்ந்த ஒருவரை நியமிக்க ஜனாதிபதி முயற்சிப்பதன் பின்னணி என்ன ? - எஸ்.எம். மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 25, 2025

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தனது கட்சி சார்ந்த ஒருவரை நியமிக்க ஜனாதிபதி முயற்சிப்பதன் பின்னணி என்ன ? - எஸ்.எம். மரிக்கார்

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் முக்கிய பொறுப்பாகிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு இதுவரை காலமும் கட்சி சார்பற்ற ஒருவரே நியமிக்கப்பட்டிடிருக்கிறார். ஆனால் தற்போது தனது கட்சி சார்ந்த ஒருவரை நியமிக்க ஜனாதிபதி முயற்சிப்பதன் பின்னணி என்ன என்ற சந்தேகம் எழுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டின் முக்கிய பொறுப்பாகிய கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமித்துக் கொள்ள அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. தனது கட்சி சார்ந்த ஒருவரை நியமிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதனாலே இந்த தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் பல அரச கணக்காய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் யாரும் எந்த கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. அப்படியாயின் தனது கட்சி சார்ந்த கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி முயற்சிப்பதன் பின்னணி என்ன என்ற சந்தேகம் எழுகிறது.

அரச நிதி தொடர்பான அனைத்து கணக்கு நடவடிக்கைகளையும் கணக்காய்வு செய்யும் பொறுப்பு அரச கணக்காய்வாளர் நாயகத்துக்கே இருக்கிறது. அதனால் இந்த பதவிக்கு கட்சி ஆதரவான யாரும் நியமிக்கப்படுவதில்லை.

என்றாலும் கடந்த காலங்களில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படட்டமை தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை, அதேபோன்று ஜனாதிபதி காரியாலயத்தினால் ஏலத்தில் விடப்பட்ட வாகனங்களின் மதிப்பீடு தொடர்பில் மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இவை கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.

அதேபோன்று மின்சார கட்டணம் ஆசியாவிலே எமது நாட்டில்தான் அதிக விலை அறவிடப்படுகிறது. அப்படி இருந்தும் மின்சார சபை எவ்வாறு 18 மில்லியன் நட்டமடைந்தது. இந்த விடயங்கள் கணக்காய்வுக்கு உட்பட்டால் இவற்றின் உண்மைத்தன்மை வெளிவரும். இவற்றை தடுப்பதற்காக அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

தனக்கு நெருக்கமானவர்கள் யாரையும் அரச உயர் பதவிகளுக்கு நியமிப்பதில்லை என தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாற்றமாக செயற்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் பல உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமானவர்களாகும்.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் தாலத்துக்கு ஆடப்போவதில்லை என தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பட்டுக்கு அமைய மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 18 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்திருக்கிறது.

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு பாடம் ஒன்றை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கத்தின் வாக்கு வங்கி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அப்படி இருந்தும் அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்திக்காமல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கத்திடம் செயற்திறமை இன்மை, பிரச்சினைகளை இனம்கண்டு அதற்கு முன்கூட்டியே தீர்வு காண முடியாமல் இருப்பது தொடர்பில் மக்கள் உணர்ந்தே தேர்தலில் அரசாங்கத்துக்கு செய்தி ஒன்றை வழங்கி இருக்கின்றனர்.

எனவே அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கும் ஒரு சில விடயங்களை கணக்காய்வுக்கு உட்படுத்தாமல் மறைப்பதற்குமா அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது என கேட்கிறோம்.

No comments:

Post a Comment