அமெரிக்க ஜனாதிபதி மனைவிக்கு இந்திய பிரதமர் அளித்த 17 இலட்சம் ரூபா மதிப்பிலான வைரம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2025

அமெரிக்க ஜனாதிபதி மனைவிக்கு இந்திய பிரதமர் அளித்த 17 இலட்சம் ரூபா மதிப்பிலான வைரம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2023ஆம் ஆண்டு ரூ. 17 இலட்சம் மதிப்பு மிக்க வைரத்தை பரிசளித்துள்ளார். 

இது, வேறு எந்த ஒரு வெளிநாட்டு தலைவரும் அளித்த பரிசுகளை விடவும் மதிப்புமிக்கது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி, அவரது மனைவி உள்பட முக்கிய தலைவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு பெற்ற பரிசுப் பொருட்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு வெளியுறவுத்துறை நேற்று (02) வெளியிட்டது.

அதன்படி, கடந்த 2023 இல் பிரதமர் மோடியிடம் இருந்த ஜில் பைடன் பெற்ற பரிசுதான் அந்நாட்டு தலைவர்கள் பெற்ற பரிசுகளிலேயே விலை உயர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. 

$20 ஆயிரம் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 17,02,510) மதிப்பு மிக்க 7.5 கேரட் வைரத்தை மோடி, ஜில் பைடனுக்கு பரிசளித்துள்ளார்.

மோடிக்கு அடுத்ததாக, உக்ரைன் நாட்டின் தூதர், ஜில் பைடனுக்கு $14,063 மதிப்பு மிக்க உடைகளில் மாட்டிக் கொள்ளும் அலங்கார நகையை (brooch) பரிசளித்துள்ளார். 
இதேபோல், எகிப்து நாட்டின் அதிபரும் அவரது மனைவியும் ஜில் பைடனுக்கு $4,510 மதிப்புமிக்க பிரேஸ்லெட், ப்ரூச், புகைப்பட ஆல்பம் ஆகியவற்றை பரிசளித்துள்ளனர்.

ஜோ பைடனும் மதிப்புமிக்க பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். தென் கொரியாவின் அதிபராக இருந்த சுக் யோல் யூன் இடம் இருந்து $7,100 மதிப்புமிக்க போட்டோ ஆல்பம், மங்கோலிய பிரதமரின் $3,495 மதிப்புமிக்க மங்கோலிய போர் வீரர்களின் சிலை, புருனே மன்னரிடம் இருந்து $3,300 மதிப்புமிக்க வெள்ளி பவுல், இஸ்ரேல் பிரதமரிடம் இருந்து $3,160 மதிப்புள்ள வெள்ளி தட்டு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் இருந்து $2,400 மதிப்புமிக்க படத்தொகுப்பு உள்ளிட்ட பரிசுகளை ஜோ பைடன் பெற்றுள்ளார்.

$480-க்கும் அதிக மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களை வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெறும்போது அதனை அரசுக்கு அறிவிக்க வேண்டும் என அமெரிக்க சட்டம் கூறுகிறது. 

அதன்படி, கிடைக்கப் பெற்ற தகவல்களை அந்நாட்டு வெளியுறவுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இத்தகைய மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் தேசிய காப்பகத்துக்கு மாற்றப்படும் அல்லது அதிகாரபூர்வமாக காட்சிப்படுத்தப்படும்.

பிரதமர் மோடி கொடுத்த 20,000 டொலர் மதிப்புள்ள வைரம், வெள்ளை மாளிகையின் கிழக்குப் பிரிவில் அதிகாரபூர்வ பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது என்றும், ஜில் பைடனுக்கு வழங்கப்பட்ட பிற பரிசுகள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment