வளி மாசு அதிகரித்துள்ளமையால் நாட்பட்ட சுவாச நோயாளர்கள் முகக் கவசம் அணியவும் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2025

வளி மாசு அதிகரித்துள்ளமையால் நாட்பட்ட சுவாச நோயாளர்கள் முகக் கவசம் அணியவும்

(செ.சுபதர்ஷனி)

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளமையால் நாட்பட்ட சுவாச நோயாளர்கள் நோயிலிருந்து பாதுகாப்பு பெற முகக் கவசங்களை அணியுமாறு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை (30) கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் இந்நாட்களில் வளி மாசு அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதனால் சிறுவர்களிடையே சுகாதார பிரச்சினைகளும் உயர்வடைந்துள்ளன.

விசேடமாக மூச்சுத்திணறல், இருமல், ஆஸ்துமா மற்றும் சுவாச நோய் சார்ந்த வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. நாட்பட்ட சுவாச நோயாளர்களுக்கும் நோய் நிலைமை தீவிரமடையலாம். ஆகையால் அனைவரும் அவதானத்துடன் செயற்படுவது நல்லது.

சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

நாட்பட்ட சுவாச நோயாளர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளர்கள், நோயிலிருந்து பாதுகாப்பு பெற முகக் கவசங்களை அணிவது நல்லது.

தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் எவரேனும் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள தகுதியான வைத்தியரை நாடுங்கள்.

அத்தோடு இன்புளுவென்சா, சிக்கன் குனியா போன்ற வைரஸ் தொற்றுகளும் சமூகத்தில் வெகுவாக பரவி வருகிறது.

பாடசாலை மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ள இக்காலத்தில் சிறுவர்கள் பல மணி நேரமாக வெளியிடங்களில் நடமாடுவதும் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியான இளைப்பு, தடிமன் உள்ளவர்களுக்கும் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படலாம். மேலும் வைரஸ் பரவல் காரணமாக நியூமோனியா ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

நீண்ட காலம் மாசடைந்த வளியை சுவாசிப்பது நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இவ்வாறான சூழ்நிலைகளின்போது உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றார்.

No comments:

Post a Comment