(செ.சுபதர்ஷனி)
ஊடகங்களுக்கு தடை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திடம் இல்லை. நாட்டு மக்களுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பை உரிய முறையில் எமது அரசாங்கம் நிறைவேற்றி வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
இலங்கை ஒலிபரப்பாளர்கள் சங்க பிரதிநிதி குழுவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஊடகம் மற்றும் அரசாங்கம் ஆகிய இரண்டும் அவதானமாகவும், புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியம். இந்நாட்டு மக்களுக்காக ஊடகங்களை முறையாக நிர்வகிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. ஒருபோதும் ஊடகங்கள் மீது தடை விதிக்கும் எண்ணம் எமது அரசாங்கத்துக்கு இல்லை.
இலங்கையின் வெகுசன ஊடக அமைச்சு கடந்த அரசாங்கத்தில் கடமையாற்றிய ஆட்சியாளர்களினால் பொறுப்பற்ற செயலற்ற ஓர் துறையாக மாற்றப்பட்டுள்ளது.
ஆகையால் வெகுசன ஊடக அமைச்சை மறு சீரமைத்து உரிய தரத்துக்கு முன்னேற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். நாட்டில் மனித வளம் மற்றும் பௌதீக வளங்கள் இருந்த போதிலும், உற்பத்தித் திறனில் சிக்கலான நிலை நிலவி வருவதை காண முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் உதவிகளின் மூலம் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அவை எமது மக்களின் வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்பின்மையால் இறுதியில் பயனற்ற வேலைத்திட்டங்களாக மாறியுள்ளன.
இதுவரை மக்களுக்கு பல கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவ்வேலைத்திட்டங்களால் நாட்டில் வினைத்திறனான செயற்பாடுகள் ஏதும் இடம்பெற்றதாக தெரியவில்லை. இந்நாட்களில் அமைச்சர்கள் மீது ஊடகங்கள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
அமைச்சர்களை கைது செய்ய முடியாது, ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதில்லை, நேர்காணல்களை வழங்குவதில்லை என தெரிவிக்கின்றனர்.
எனினும் நாட்டில் நிலவிவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊடக அறிக்கைகளை வெளியிடுவதைவிட அரசாங்கத்தின் வலுவான அடித்தளத்தை வினைத்திறனுடன் தயார்படுத்தும் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதற்கு, அமைதியாகவும், ஓய்வின்றியும் அமைச்சர்கள் அனைவரும் பணிபுரிந்து வருகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment