அரிசிக்கான இறக்குமதி வரியைக் குறைக்கவோ, கட்டுப்பாட்டு விலையை நீக்கவோ முடியாது - அமைச்சரவை பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2024

அரிசிக்கான இறக்குமதி வரியைக் குறைக்கவோ, கட்டுப்பாட்டு விலையை நீக்கவோ முடியாது - அமைச்சரவை பேச்சாளர்

(எம்.மனோசித்ரா)

உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகவே இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு வரி அறவிடப்படுகிறது. அந்த நோக்கத்திலேயே கட்டுப்பாட்டு விலையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அரிசிக்கான இறக்குமதி வரியைக் குறைக்கவோ, கட்டுப்பாட்டு விலையை நீக்கவோ எதிர்பார்க்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரிசி தட்டுப்பாட்டுக்கான தீர்வினை வழங்குவதற்காகவே தனியார் துறைக்கும் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இறக்குமதிக்கான கால அவகாசம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரை 77,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11,000 மெட்ரிக் தொன் அரிசி ஓரிரு தினங்களில் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளது.

பாரிய தொகை அரிசி நாட்டை வந்தடைந்திருந்தாலும், தனியார் துறையினர் ஊடான விநியோகத்தில் சிக்கல் காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். அதேபோன்று சிவப்பரிசி தொடர்பிலும் சில இடங்களில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறுகிய காலத்துக்குள் இந்த பிரச்சினைக்கும் தீர்வு கிட்டும் என்று நம்புகின்றோம்.

அரசாங்கம் என்ற ரீதியில் அரிசி இறக்குமதியில் தலையீடு செய்வதைப் போன்றே, ஜனவரி மத்தியில் தேசிய விவசாயிகளின் அரிசி சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுப்போம். சதொச ஊடாக குறிப்பிட்ட தொகை அரிசி இருப்பு பேணப்படுகிறது. அதேபோன்று உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விலைகளைப் பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகவே இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரி விதிக்கப்படாவிட்டால் உள்நாட்டு விவசாயிகளுக்கு அந்த விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது. விவசாயிகள் தொடர்பில் அவதானம் செலுத்திய பின்னரே அரிசி தொடர்பான சகல தீர்மானங்களும் எடுக்கப்படுகின்றன.

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பின்போதே அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டது. அவர்களுக்கு இந்த விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே குறித்த கட்டுப்பாட்டு விலை தீர்மானிக்கப்பட்டது.

எனவே அரசாங்கத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை பாதுகாக்க வேண்டியது அரிசி ஆலை உரிமையாளர்களின் பொறுப்பாகும். எனவே கட்டுப்பாட்டு விலையில் மாற்றங்களை ஏற்படுத்த ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அதேபோன்று இறக்குமதி வரியைக் குறைப்பது தொடர்பிலும் அரசாங்கம் எவ்வித அவதானமும் செலுத்தவில்லை என்றார்.

No comments:

Post a Comment