யாழ். மாவட்டத்தில் பரவும் மர்ம காய்ச்சல் ! தொற்றுநோய் பிரிவு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 11, 2024

யாழ். மாவட்டத்தில் பரவும் மர்ம காய்ச்சல் ! தொற்றுநோய் பிரிவு எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலை எலிக் காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் கூறுகிறார்.

எலிக் காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று புதன்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அப்பகுதிகளில் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தற்போது சம்பந்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

2023ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 9,000 க்கும் மேற்பட்ட எலிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் கிட்டத்தட்ட 200 பேர் இறந்தனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நெல் விவசாயம் தொடர்பான சேறு மற்றும் நீர் தொடர்பான பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெல் வயல் மற்றும் நீர் தொடர்பான பிற கடமைகளில் அடிக்கடி ஈடுபடுபவர்கள், சுரங்கங்கள் மற்றும் நீர் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம்.

வாந்தி, தலைவலி, உடல் பலவீனம், சிறுநீரில் இரத்தம், சிறுநீர் கழித்தல் குறைதல் போன்றவற்றுடன் கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி மற்றும் கண் சிவத்தல் ஆகியவை எலிக் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் தொடர்ந்தால், ஆரம்பகால சிகிச்சையானது நோயின் தீவிர நிலையை அடைவதைத் தடுக்கலாம். இல்லையெனில், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம். மேலும் மரணம் கூட ஏற்படலாம்.

வயல் மற்றும் நீர் தொடர்பான வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் மக்களுக்கு சுகாதார அமைச்சினால் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அதற்கமைய அவர்களின் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகரிடம் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் கடத்த சில நாட்களில் மர்ம காய்ச்சலால் ஐவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் திடீர் காய்ச்சல் காரணமாக போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலால் 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment