தேங்காய்களை பதுக்கி ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள் முயற்சி : முன்னிலை சோசலிசக் கட்சி - News View

About Us

Add+Banner

Breaking

  

Monday, December 9, 2024

demo-image

தேங்காய்களை பதுக்கி ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள் முயற்சி : முன்னிலை சோசலிசக் கட்சி

1551863121-Pubudu-Jagoda-on-real-reason-why-govt-is-bringing-anti-terrorism-act-B%20(Custom)
(இராஜதுரை ஹஷான்)

சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தேங்காய்களை பதுக்கி அவற்றை ஏற்றுமதி செய்து அதனூடாக இலாபமடைய ஒரு சில வர்த்தகர்கள் முயற்சிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்வி பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதால் தேங்காயின் விலை உயர்வடைந்துள்ளது. சந்தையில் ஒரு தேங்காய் 192 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொழும்பில் ஒரு சில பகுதிகளில் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தரவுகளுக்கமைய இலங்கையில் வருடாந்தம் 3100 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறான நிலையில் வருடாந்த நுகர்வுக்கு 2100 மில்லியன் தேங்காய்கள் பயன்படுத்தப்படுவதுடன், மிகுதி தேங்காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அதனூடாக 400 - 600 மில்லியன் டொலர் வருமானம் திரட்டப்பட்டன.

இருப்பினும் இந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி 700 மில்லியனாக குறைவடைந்துள்ளது. இதற்கு குறுங்கால காரணிகள் தாக்கம் செலுத்தவில்லை. நீண்ட கால காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளன.

கடந்த காலங்களில் தென்னந்தோப்புகள் மற்றும் அதனுடனான காணிகள் பெருமளவில் ஏலம் விடப்பட்டன. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கமே இச்செயற்பாட்டை முன்னெடுத்தது.

2019-2020 காலப்பகுதியில் காணப்பட்ட உர தட்டுப்பாட்டை தொடர்ந்து தெங்கு பயிர்ச் செய்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

தென்னை மரங்களை தாக்கும் ஒரு வகையான தொற்று நோயை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தினோம். இருப்பினும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை. இக்காரணிகளுடன் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கங்களினாலும் இன்று தேங்காய் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.

தேங்காய் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தேங்காய்களை பதுக்கி அவற்றை ஏற்றுமதி செய்து அதனூடாக இலாபமடைய ஒரு சில வர்த்தகர்கள் முயற்சிக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *