மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட வீதி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். பொதுமக்களும், சாரதிகளும் வீதி விதிமுறை சட்டங்களை பின்பற்றுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பண்டிகை காலங்களில் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் கடந்த 22 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணி முதல் புதன்கிழமை (25) காலை 6 மணி வரையிலான நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து கண்காணிப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 251 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கவனயீனமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராகவும், அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் 128 பேருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீதி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 1368 பேருக்கு எதிராகவும், சாரதி அனுமதிப்பத்திர முறைகேடு தொடர்பில் 615 பேருக்கு எதிராகவும் மற்றும் இதர போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் 6,304 பேருக்கு எதிராகவும் இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வீதி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக 8,747 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் வாகன விபத்துக்களால் எந்தவித உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். பொதுமக்களும். சாரதிகளும் வீதி விதிமுறை சட்டங்களை பின்பற்றுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கைகயின் கீழ், வாகனங்களை கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் செலுத்துவோர் அல்லது போக்குவரத்து விதிகளை மீறுவோர் குறித்து 119 அல்லது 1997 என்ற தொலைபேசி எண்கள் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment