தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 30 தொன் டொலமைட் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில் 6 ஆவது கிலோ மீற்றர் கணுவுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி சுமார் 20 அடி சாய்வில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் 70 வயதுடைய சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். அவரது காலில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
50 கிலோ நிறை கொண்ட 600 டொலமைட் பொதிகளுடன் லொறி மூன்று தடவைகள் புரண்டு வீழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாத்தளை பிரதேசத்தில் இருந்து எல்பிட்டிக்கு டொலமைட் கொண்டு சென்று கொண்டிருந்த குறித்த லொறி, கஹதுடுவ நுழைவாயிலுக்கு அருகில், இடதுபுற பாதுகாப்பு வேலியை கடந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
மூடப்படாத லொறியில் ஏற்றப்பட்ட டொலமைட் தொகையானது இதன்போது லொறிக்கு அருகில் வீழ்ந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தின் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 25 அடி பாதுகாப்பு வேலி பலத்த சேதமடைந்துள்ளது.
லொறி சாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மூன்று நாட்களாக சரியாக தூங்கவில்லை என்பது தெரியவந்ததாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்றபோது லொறியில் சாரதி மாத்திரமே இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
சாரதி மாத்தளையில் வசிக்கும் 70 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விபத்து காரணமாக அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலிக்கு பல இலட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(படங்கள்: பண்டாரகம – பிமல் ஜயசிங்க)
No comments:
Post a Comment