தமது கணவர் விஜயகுமாரதுங்க அரசியல் காரணமாக படுகொலை செய்யப்பட்டதை போன்று தன்னையும் படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
50 பேராக இருந்த தனக்கான பாதுகாப்பை 30 பேராக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ஹேமசிறி கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி தனக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243 பேர் 200 பேர் மற்றும் 109 பேர் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவை வழங்கியுள்ள நிலையில், தனக்கு மாத்திரம் 30 பேரை வழங்குவதற்கு தீர்மானம் எடுத்திருப்பது எந்த வகையில் நியாயமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தனது கடிதத்தினூடாக கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், ஓய்வு பெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தாம் ஓய்வு பெற்றாலும் தன்னைக் கொன்று விடுவோம் என பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் மூலம் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் 63 இராணுவத்தினர் மற்றும் 180 பொலிஸார் அடங்கிய 243 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், மைத்திரிபால சிறிசேனவிடம் 109 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், கோட்டாபய ராஜபக்சவிடம் 25 பொலிஸாரும் 175 இராணுவத்தினர் அடங்கிய 200 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உள்ளனர், ஆனால் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 50 இல் இருந்து 30 வரை குறைப்படுவதை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின்போது தாம் ஆட்சிக்கு வரும்போது உயரடுக்கு பாதுகாப்பு கிடைக்காது என ஜே.வி.பி தலைவர்கள் தெரிவித்த போதிலும் எமது நாட்டின் உயரதிகாரிகளுக்கு ஓரளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கமும் ஏற்றுக் கொள்வதாலேயே அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நூற்றுக்கணக்கான அரசாங்கத் தலைவர்களுக்கு பாதுகாப்பு படைகள் வழங்கப்பட்டதா என முன்னாள் ஜனாதிபதி உரிய கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment