ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வலுவான தலைமையின் கீழ், இலங்கை அரசாங்கமும், மக்களும் நிச்சயமாக தன்னம்பிக்கையுடன், பல்வேறு இடர்களையும் சவால்களையும் கடந்து, சிரமங்களிலிருந்து விரைவாக மீண்டு, பொருளாதாரத்தை புத்துயிர் பெற முடியும் என கீ சென்ஹொங் தெரிவித்தார்.
கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான “சீனத் தூதுவர் புலமைப்பரிசில்” வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் கீ சென்ஹொங் முதலில், சீன மற்றும் சிங்கள மொழிகளில் பொறிக்கப்பட்ட ‘காலனித்துவம் மற்றும் படையெடுப்பிற்கு எதிராகவும் சுதந்திரத்திற்காகவும் தைரியமாக போராடிய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய தூதுவர் குறிப்பிடுகையில், மாணவர்களின் அன்பான வரவேற்பு சீன மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான சகோதரத்துவத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.
இந்த புலமைப்பரிசில் திட்டம் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது இலங்கையில் 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதுவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சீனாவும், இலங்கையும் வெகுதொலைவில் உள்ளன, ஆனால் எங்கள் நட்பு பரிமாற்றம் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
சர்வதேச நிலைமைகள் எவ்வாறு மாறினாலும், சீனா எப்போதும் இலங்கை மக்களுடன் நிற்கும். அத்துடன் இலங்கையின் நம்பகமான நண்பராகவும் நல்ல பங்காளியாகவும் உள்ளது.
இலங்கை தற்போது புதிய சகாப்தத்தில் பிரவேசித்துள்ளதுடன், சீன அரசாங்கமும் மக்களும் தங்களால் இயன்ற வகையில் இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவார்கள்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வலுவான தலைமையின் கீழ், வீர உணர்வை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், இலங்கை அரசாங்கமும் மக்களும் நிச்சயமாக தன்னம்பிக்கையுடன், பல்வேறு இடர்களையும் சவால்களையும் கடந்து, சிரமங்களிலிருந்து விரைவாக மீண்டு, பொருளாதாரத்தை புத்துயிர் பெற முடியும் என்றார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி.அபோன்ஸ் குறிப்பிடுகையில், இலங்கை செழிப்பு மற்றும் வலிமை அடைவதற்கு சீன அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் உதவிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாடசாலையின் பழைய மாணவர் என்ற வகையில், சீனத் தூதரகம் வழங்கிய நன்கொடைக்கு மனமார்ந்த நன்றிகள். இச்செயற்பாடு இலங்கை - சீன நட்புறவை தொடர்ந்து ஆழப்படுத்துவதற்கு பங்களிக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment