எமது மக்கள் சலுகைகளுக்கு விலை போகின்றவர்கள் அல்லர் - வேலுகுமார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 6, 2024

எமது மக்கள் சலுகைகளுக்கு விலை போகின்றவர்கள் அல்லர் - வேலுகுமார்

''பருவ கால பறவைகள் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வரும் அரசியல்வாதிகள், சலுகைகளை வழங்கி வாக்குவேட்டை நடத்திவிடலாம் என கருதுகின்றனர். எமது மக்கள் சலுகைகளுக்கு விலை போகின்றனவர்கள் அல்லர். உரிமைக்காகவே வாக்களிப்பார்கள்." என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா பரிசு பொதிகளை கொண்டுவருவது போல, தேர்தல் காலத்தில் சலுகைகளுடன் தோட்டப் பகுதிகளுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் கூறினார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய வேலுகுமார், இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், ''கண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் வாக்குகளை அதுவும் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள வாக்குகளை சலுகைகளை வழங்கி பெற்று விடலாம் என அரசியல்வாதிகள் சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக பணத்தை வாரி வழங்குகின்றனர். இதற்கு சில துரோகிகளும் துணைநின்று, முகவர்களாக செயற்படுகின்றனர்.

கண்டி மாவட்டத்தில் தமிழ் மக்களுக்குரிய அரசியல் உரிமைகளையும், அபிவிருத்திகளையும் நானே கடந்த 10 ஆண்டுகளில் பெற்றுக் கொடுத்தேன். மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தேன். அப்போதெல்லாம் மௌனம் காத்துவிட்டு, எமது மக்கள் பற்றி சிந்திக்காதவர்கள் இன்று வாக்குக்காக வருவது சுயநல அரசியலின் வெளிப்படாகும். இப்படியானவர்களை நம்பினால் ஆபத்தே மிஞ்சும்.

எனவே, நமக்கான பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்ளும் முடிவில் கண்டி மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். அந்த முடிவில் இருந்து மாறக்கூடாது. மூளைச்சலவை செய்வதற்கு சிலர் முற்படலாம். எதற்கும் நாம் மாறிவிடக்கூடாது. நமது தமிழ்ப் பிரதிநிதித்துவம்தான் நமக்கான அடையாளம்." என குறிப்பிட்டார்.

கண்டி நிருபர் ராஜ்

No comments:

Post a Comment