20 - 30 வயது வரையான சகலரும் தடுப்பூசி பெறுவது அவசியம் : அறிவுறுத்தும் வைத்தியர் பஸால் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 7, 2024

20 - 30 வயது வரையான சகலரும் தடுப்பூசி பெறுவது அவசியம் : அறிவுறுத்தும் வைத்தியர் பஸால்

காற்றினால் வேகமாக பரவும் சின்னமுத்து வைரஸ் நோய்க்குரிய தடுப்பூசியை சிறுபராயத்தில் போடாதவர்கள் கண்டிப்பாக இத்தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென, கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் தெரிவித்தார்.

தற்போது இந்நோய் 20 வயது தொடக்கம் 30 வயது வரையானோர் மத்தியில் தீவிரமாக பரவுவதால் இவர்களுக்கு சின்னமுத்து தடுப்பூசி நாளை 9ஆம் திகதி முதல் நாடு பூராகவும் வழங்குவதற்குரிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தத்தமது பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலோ அல்லது தடுப்பூசி வழங்கும் மையங்களுக்கோ சென்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியுமென்றார்.

சின்னமுத்து நோய்க்குரிய இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதனூடாக இப்பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற முடியுமெனவும், அவர் கூறினார்.

20 வயது தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட சகலரும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார். 

சின்னமுத்து நோய் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிக்கப்பட்டாலும், 2023ஆம் ஆண்டு முதல் மீண்டும் பரவிக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இந்நோயானது நோயாளி ஒருவரிடமிருந்து 18 பேருக்கு தொற்றக் கூடியதென்பதுடன், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தையும் ஏற்படுத்துமெனவும் குறிப்பிட்டார்.

இள வயதுடைய எவரும் சின்னமுத்து நோய்க்கு உள்ளாகலாமெனவும், அவர் கூறினார்.

இருமல், தும்மல், சுவாசத்திரவதுளி, தொடுகை மூலம் இந்நோய் தொற்றும் அபாயமுள்ளதுடன், பொதுமக்கள் பெருமளவு நடமாடும் இடங்களிலேயே இத்தொற்றுக் காணப்படும். 

சாதாரணமாக முகம் மற்றும் கழுத்தில் ஆரம்பிக்கும் கொப்பளங்கள் உடல் முழுவதும் பரவுதல், காய்ச்சல் மற்றும் சருமத்தில் ஏற்படும் கொப்பளங்களுடன் கண்கள் சிவத்தல், மூக்கிலிருந்து நீர் வடிதல், இருமல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக உள்ளதாகவும் ஆகையால் இவ்வாறான அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகுமெனவும், அவர் தெரிவித்தார்.

சின்னமுத்து நோயால் வேறு நோய்த் தாக்கமும் ஏற்படக்கூடிய அபாயமுள்ளதாகவும் குறிப்பாக நியுமோனியா, மூளை வீக்கமடைதல், குருட்டுத்தன்மை அடங்கலாக கண்களில் குறைபாடு, கேட்டல் குறைபாடு, கடும் வயிற்றோட்டம், பல வருடங்களின் பின்னரும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அரிதான மூளைக் குறைபாடுகளை ஏற்படுத்துமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

(பாலமுனை விசேட நிருபர்)

No comments:

Post a Comment