சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு தலா 35 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (06) தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தலா 125 மில்லியன் ரூபா அபராதம் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தீர்ப்பளித்துள்ளார்.
இவர்கள் அனைவருமாக 500 மில்லியனை அபராதமாகச் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பஸ் வண்டிகளுக்கான உதிரிப்பாகங்களை, துறைமுகத்திலிருந்து விடுவிப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, இவர்களுக்கு நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.
கொழும்பு, பஞ்சிகாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இவ்வாறு 125 மில்லியன் ரூபாவை இவர்கள் இலஞ்சமாகப் பெற்றுள்ளனர். இக்குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களுக்கு மேற்படி தண்டனையை வழங்கியுள்ளது.
நீண்ட கால வழக்கு விசாரணையின் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்க அரசாங்கத் தரப்பால் முடிந்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே குறிப்பிட்டார்.
விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த முடியாத பட்சத்தில் மேலும் 15 மாத சிறைத் தண்டனையும் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 3 மாத சிறைத் தண்டனையும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ரூ.150 மில்லியன் இலஞ்சமாக கேட்டு, அதில் ரூ.125 மில்லியனைப் பெற்றுள்ளனரென்பது விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
பெறப்பட்ட இலஞ்சத் தொகையை அபராதமாக தனித்தனியாக செலுத்துமாறும் அத்தொகையை செலுத்த முடியாத பட்சத்தில் மேலும் 2 வருட சிறைத் தண்டனை விதித்தும் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்போதும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் எழுத்து மூல அனுமதியின்றி தாக்கல் செய்யப்பட்டதால் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) வாபஸ் பெறப்பட்டது.
தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகையை மீண்டும் தாக்கல் செய்ய இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.
அதன் பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் மேற்படி வழக்கு விசாரணை மீள ஆரம்பமானது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment