புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களின், அமைச்சர்களின் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளில் மீள் கவனம் செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (30) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 07 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
மக்களுடைய வாக்குகளால் நியமிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கு மற்றும் முன்னாள் ஜனாதிபதிமாருக்கு சம்பளம், கொடுப்பனவு, ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லம், வாகனங்கள், பணியாட்குழாம், அலுவலக உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போன்ற பல்வேறு உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதற்காக மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அரசு குறிப்பிடத்தக்களவு செலவை வருடாந்தம் மேற்கொள்கின்றது.
தற்போதுள்ள அரச நிதியில் மேற்படி அதிகளவான செலவுகளைக் குறைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, அது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து திறைசேரிக்கு தேவையற்ற செலவுச் சுமைகளை ஏற்படுத்துகின்றதும் மற்றும் தர்க்க ரீதியற்ற உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை தர்க்க ரீதியான முறையில் மட்டுப்படுத்துவதற்கு அல்லது மாற்று முறைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பொருத்தமான விதந்துரைகளுடன் கூடிய விபரமான அறிக்கையை இரண்டு (2) மாதங்களில் சமர்ப்பிப்பதற்காக கீழ்காணும் கட்டமைப்புடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக சட்டம், பொதுநிருவாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் தொழில் அமைச்சராக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திரு. கே.ரீ. சித்திரசிறி – (தலைவர்)
ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதியரசர்
திரு.டி. திசாநாயக்க அவர்கள்
ஓய்வுநிலை அமைச்சின் செயலாளர்
திருமதி ஜயந்தா சீ.டீ. புளுமுல்ல
ஓய்வுநிலை மாவட்ட செயலாளர்/ அரசாங்க அதிபர்
2. 2024 பொதுத் தேர்தலுக்காக நிதி ஒதுக்கீடு வழங்கல்
2403/13 மற்றும் 2024.09.24 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், 2024.11.14 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு திகதி குறித்தொதுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், 2024 வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்துவதற்காக திரட்டு நிதியத்திலிருந்து நிதியை விடுவிப்பதற்கு அரசியலமைப்பின் 150 ஆவது உறுப்புரையில் (4) உப உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான திரட்டு நிதியத்திலிருந்து 05 பில்லியன் ரூபாய்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதி மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு ஏற்புடைய 2025 ஆம் ஆண்டில் ஈடுசெய்யப்பட வேண்டிய செலவான 06 பில்லியன் நிதி ஒதுக்கீட்டை 2025 ஆம் ஆண்டின் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் இடைக்கால நிறைவேற்றுக் கணக்கின் மூலம் ஒதுக்கி வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
3. கட்டுப்பணம் விடுவிப்பதில் நிலவுகின்ற மட்டுப்பாடுகளை நீக்குதல்
ஒருசில செலவுகளுக்காக திறைசேரி மூலம் அந்தந்த அமைச்சுக்களுக்கு கட்டுப்பணத்தை விடுவிக்கும்போது குறித்த செலவுகளின் முன்னுரிமையின் அடிப்படையில் நிதி அமைச்சரின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென 2023.02.13 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தொடர்ந்தும் கட்டுப்பணம் விடுவிக்கும் போது முன்னுரிமை அடிப்படையைப் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லாதிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால், நிதி அமைச்சரின் விசேட அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் அத்தியாவசிய செலவுகளுக்குக் கட்டுப்பணத்தை விடுவிப்பதற்காக நிதி விடயதானத்திற்குப் பொறுப்பான செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4. ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் நியமனம்
அரசியலமைப்பின் 41 ஆவது உறுப்புரையின் (01) ஆம் உப உறுப்புரையில் அதிகாரமளிக்கப்பட்டதன் பிரகாரம் அமைச்சரவையின் கருத்துக்களைக் கேட்டறிந்து தனது பணிக்குழாமினரை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2024.09.24 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் துமிந்த ஹலங்கமுவ (பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதி தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக) மற்றும் கலாநிதி. ஏ.ஏ.ஜே. பர்னாந்து (பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதி தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக) ஆகியோரை சேவை அடிப்படையில் நியமிப்பதற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
5. அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் பதவிக்கான நியமனம்
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய தினித் சிந்தக்க கருணாரத்ன பதவி விலகியமையால், அப்பதவி தற்போது வெற்றிடமாகக் காணப்படுகின்றது.
அதனால், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் (நிர்வாகம்) பதவியில் பணிபுரிந்த இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான எச்.எஸ்.கே.ஜே.பண்டாரவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாக முழுநேரப் பதில் கடமைக்கு நியமிப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6. குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில்கடமை நியமனம்
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதியாகப் பணியாற்றிய திரு. ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டியவை 2024.09.25 ஆம் திகதி தொடக்கம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தடுப்புக் காவலில் இருப்பதால், குறித்த பதவியில் பணிகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக பொருத்தமான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது.
அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றி வருகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர உத்தியோகத்தரான திருமதி. பீ.எம்.டீ.நிலூசா பாலசூரிய அவர்களை உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில் கடமைக்கு நியமிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7. அமைச்சரவை பேச்சாளர்
அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment