எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பேரழிவு தொடர்பான இழப்பீட்டு வழக்குகளை சீர்குலைப்பதற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (7,500 கோடி ரூபா) இலஞ்சம் வழங்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு மீதான விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவில் தாமதமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவல், முன்னாள் பிரதி அமைச்சரும் சுற்றுச்சூழல் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அப்போதைய தலைவருமான அஜித் மான்னப்பெருமவுக்கு வட்ஸ்அப் செய்தி மூலம் கிடைத்துள்ளதுடன் இதனை அவர் அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்குத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, கடல்சார் சுற்றுச்சூழல் அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறையிட்டதையடுத்து தொடர்புடைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும குற்றப் புலனாய்வு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, இந்த இலஞ்சம் குறித்து தனக்கு முதலில் வட்ஸ்அப் மூலம் கிடைத்த செய்தி தனது தொலைபேசியில் அழிந்து போனதாக அவர் தெரிவித்துள்ளார்.
அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு தான் அதை அனுப்பியதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அப்போது நீதி அமைச்சரிடம் கேட்டபோது, தொடர்புடைய தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான முதற் கட்ட அறிக்கையை நீதிமன்றத்திக்கு சமர்ப்பித்துள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடிப்படை உரிமைகள் விசாரணையின்போது, உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோடகொட இந்த கப்பல் பேரழிவு குறித்து கவனம் செலுத்தினார்.
இதற்கிடையில், ஜனாதிபதி செயலகத்திலிருந்த ஒரு தலைமை அதிகாரியும், அமைச்சரும் கப்பலின் செலவுகளை அமெரிக்க டொலர்களில் அல்ல, ரூபாயில் திருப்பிச் செலுத்துமாறு அறிவுறுத்தியதாக கடல்சார் சுற்றுச்சூழல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் தர்ஷனி லஹந்தபுர பாராளுமன்றக் குழுவின் முன் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு தொடர்பான விடயங்கள் அனைத்திலும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment