யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனின் முறைகேடான சொத்து குவிப்பு குறித்து விசாரணை நடத்தக்கோரி, சிவில் புலனாய்வு முன்னணி, சட்டவிரோத சொத்துக்கள் பிரிவில் முறைப்பாடளித்துள்ளது.
அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் பெருமளவில் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ள சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு அந்த முன்னணி வலியுறுத்தியுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் சிவில் புலனாய்வு முன்னணியின் தலைவர் சஞ்சய மஹாவத்தே இது தொடர்பான முறைப்பாட்டை அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாம் தெற்கில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பொதுமக்களின் சொத்து மோசடி உள்ளிட்ட ஊழல்களிலேயே இதுவரை கவனம் செலுத்தினோம். தெற்கிலும் பார்க்க வடக்கில் இவ்வாறான மோசடிகார்கள் இருப்பதை தற்போது எம்மால் கண்டறிய முடிந்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறித்தே முறைப்பாடு செய்துள்ளோம். இவர், 2010 ஆம் ஆண்டு பாடசாலை அதிபராக பணியாற்றியவர். அரசியலில் பிரவேசித்த ஸ்ரீதரன், தற்போது கோடிக்கணக்கான சொத்துக்களை சேகரித்துள்ளார்.
கிளிநொச்சி என்பது மிகவும் பின்தங்கிய பிரதேசம், வறுமைகோட்டுக்கு உட்பட்ட மக்கள் வாழும் பிரதேசம் என்பதை நாம் அறிவோம். இங்குள்ள மக்கள் ஒருவேளை உண்டுதான் வாழுகின்றார்கள் என்பதை நான் நன்கறிவேன்.
இவ்வாறான பின்தங்கிய பிரதேசத்திலிருந்து வந்த அரசியல்வாதி குறுகிய காலத்தில் கோடீஸ்வரராகிறார். அவருக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவு முதலானவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது அவரது தற்போதைய சொத்து பல மடங்காகும்.
இவரது வருமானத்திற்கு ஏற்ப இந்த பெறுமதி இவ்வாறிருக்க முடியாது. இதனால்தான் இந்த சொத்து எவ்வாறு வந்தது என்பதை நாம் கேட்கின்றோம்.
எஸ்.ஸ்ரீதரனின் மனைவியின் பெயரில் இரண்டு ஜஸ்கிரிம் கடைகள் உள்ளன. கிளிநொச்சியில் ஒன்றும் மற்றொன்று யாழ்ப்பாணத்திலும் உண்டு.
இதேபோன்று மகளின் பெயரில் பல்பொருள் அங்காடி கடைகள் உண்டு. இதில் ஒன்று கிளிநொச்சியிலும் காங்கேசன்துறையிலும் உண்டு.
மேலும், கடந்த அரசாங்க காலப்பகுதியில் மதுபான விற்பனை அனுமதிபத்திரம் இவருக்கு கிடைத்துள்ளது. இது அரசியல் நன்கொடையாக அவருக்கு கிடைத்துள்ளது. அத்துடன், இவருக்கு 2 லிக்கர் சொப் உள்ளன.
இவரது சொத்து விபரங்களை கூறுவதாயின் இன்னும் பத்து நிமிடங்கள் செல்லும். இவரது சொத்துக்கள் உறவினர்களின் பெயரில் அதாவது கனடாவில் இருப்பவர்களின் பெயர்களின் சொத்துக்கள் இருக்கின்றதா? என்பது குறித்து நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
இதுபோன்று இதற்கு முன்னரும் பல மோசடிகாரர்களின் முறைகேடான சொத்து விபரங்கள் குறித்து நாமே முறைப்பாடளித்தோம் என சிவில் புலனாய்வு முன்னணியின் தலைவர் சஞ்சய மஹாவத்தே மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment