காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ளல் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் 26.07.2025 சனிக்கிழமை வனஜீவராசிகள் திணைக்கள கிரான் காரியாலயத்தில் இடம்பெற்றது.
நேற்றுமுன்தினம் இரவு கடதாசி ஆலை காட்டுப் பகுதியிலிருந்து மக்கள் குடியிருப்புக்கள் உள்ள தியாவட்டவான், பாலக்காட்டு பிரதேசத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை தவிசாளர் தலைமையிலான கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவையினரும் சுழியோழி அணியினர் அடங்கிய குழுவினரும் விரட்டியடிக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.
தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெறும் யானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையிலான குழுவினருக்கும், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்குமிடையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலின்போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் மிக விரிவாக ஆராயப்பட்டன.
01. முதற்கட்டமாக காட்டு யானைகளின் வரவைக் கட்டுப்படுத்தும் வன்னம் பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை அண்மித்து கொட்டப்படும் குப்பைகள், கழிவுகளை தூர இடங்களுக்கு நகர்த்துவதற்கான செயற்றிட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
02. காட்டு யானைகள் வாகரை, வெலிகந்தை ஆகிய காடுகளிலிருந்து வருகை தருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதால் வாகரை, வெலிகந்தை பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஏகோபித்த தீர்வொன்றுக்கு வருவது சிறந்தது என இதன்போது கருத்துத்தெரிவிக்கப்பட்டது.
03. காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு நிரந்தரத் தீர்வாக முன்னெடுக்கப்பட்டு வரும் யானை வேலி அமைக்கும் பணிகளை துரிதப்படுத்துவதுடன், மேலதிகமாக யானை வேலிகளை அமைக்க தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தவிசாளர் இதன்போது கருத்துத் தெரிவித்திருந்தார்.
04. கடந்த காலங்களில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை அணியினருக்கு வழங்கப்பட்ட யானை காப்பு பயிற்சிநெறியின் இரண்டாம் கட்ட பயிற்சியை பிரதேச இளைஞர்கள், வயல் பிரதேசங்களில் காவல் பணிகளில் ஈடுபடும் விவசாயிகளையும் இணைத்து நடாத்துவது சிறந்தது என இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
05. நாவலடி முதல் வாகனேரி வரை யானைகள் மறைந்திருக்கக் கூடிய பற்றைகள், புதர்கள், குப்பைகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை ஓட்டமாவடி, வாகரை பிரதேச சபைகள் ஒன்றினைந்து இராணுவத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வது என இதன்போது இணக்கம் காணப்பட்டது.
06. மஜ்மா நகர், காவத்தமுனை, பாலக்காடு, அறபா நகர் மற்றும் நாவலடியை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் பெரு மரங்கள் தவிர்ந்த பற்றைக் காடுகளை பிரதேச சபையின் கனரக வாகனங்களின் உதவியுடன் வெட்டி அகற்றுவது பொருத்தமானது என இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையடலின் இறுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் ஒரு தொகுதி யானை வெடில்களும் கையளிக்கப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ், பிரதேச சபை உறுப்பினர் றிஸ்வின், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர் முஹம்மது ஹலீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment