மக்களின் விருப்பப்படி ஆற்றல் மிக்க புதிய முகங்களை களமிறக்க வேண்டும் - சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 28, 2024

மக்களின் விருப்பப்படி ஆற்றல் மிக்க புதிய முகங்களை களமிறக்க வேண்டும் - சுமந்திரன்

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத் தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல் மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனையடுத்து, சகல அரசியல் கட்சிகளும் இம்முறை பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான வியூகங்களை அமைத்து வருகின்றன. இந்நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்பொதுத் தேர்தலை அணுகவிருக்கும் விதம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி போட்டியிடும்போது, நாடளாவிய ரீதியில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எமது பிரதேசங்களிலும் நிகழுமா என்ற கேள்வி பலரால் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, இளையவர்கள், பெண்கள், ஆற்றல் உடையவர்கள், அனுபவசாலிகள் எனப் பொருத்தமான தரப்பினரை அரசியல் கட்சிகள் முன்னிறுத்துமா என்ற அங்கலாய்ப்பு நம் மக்கள் மத்தியில் உள்ளது.

அதனைப் புரிந்துகொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் ஆற்றல்மிக்க புதிய முகங்களைக் களமிறக்க வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாகும். எமது கட்சி உறுப்பினர்கள் பலரும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். அதற்கமைய கட்சியின் மத்திய செயற்குழுவே இது குறித்துத் தீர்மானிக்கும். இருப்பினும் அந்தத் தீர்மானம் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment