(எம்.ஆர்.எம்.வசீம்)
வரலாற்றிலேயே மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றத் தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.
நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர். அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.
அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.
ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்குகொண்டு வர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம்.
பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.
அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.
அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார்.
No comments:
Post a Comment