ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பரப்பப்பட்டுவரும் போலி தகவல்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, September 13, 2024

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பரப்பப்பட்டுவரும் போலி தகவல்கள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பரப்பப்பட்டுவரும் போலியான தகவல்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெள்ளிக்கிழமை (13) வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும், நீதியாகவும், நம்பகத்தன்மையுடனும் நடாத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே செய்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு இவ்விடயத்தில் நியதிச்சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த சுற்றறிக்கைகளையும், அறிவுறுத்தல்களையும், பணிப்புகளையும் வெளியிட்டுள்ளதோடு அது சம்பந்தமாக பொதுமக்களையும் வெகுசன ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், இன்றைய தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்குப் புறம்பாக பல்வேறு நபர்களும், அமைப்புகளும் தேர்தல் செயன்முறை சம்பந்தமாக (அதாவது வாக்கு அடையாளமிடும் விதம், வாக்குகளையும் விருப்புகளையும் எண்ணும் விதம், தேர்தல் சட்டங்களை வலுவாக்கம் செய்தல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளும் வேறு நிர்வாகம் சார்ந்த பணிகளும் குறித்து) அடிக்கடி தெரிவித்துவரும் கூற்றுக்களும் அபிப்பிராயங்களும் ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.

அவை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் அல்ல என்பதும், அவ்வாறான கூற்றுக்கள் எவையும் உத்தியோகபூர்வ செல்லுபடித்தன்மை அற்றவை என்பதும், அவை சம்பந்தமான பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என்பதும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தல் தொடர்பான அனைத்து விடயங்களும் பணிகளும் உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதால் வேறு நபர்களோ, அமைப்புகளோ வெளியிடும் கூற்றுக்களையும் அபிப்பிராயங்களையும், அறிவுறுத்தல்களையும் பொருட்படுத்த வேண்டாமென இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment