இல்யாஸுக்கு அளிக்கப்படும் வாக்குகள் இரத்து செய்யப்படும் - News View

About Us

About Us

Breaking

Friday, September 13, 2024

இல்யாஸுக்கு அளிக்கப்படும் வாக்குகள் இரத்து செய்யப்படும்

ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் இடம்பெற்றுள்ள ஊசி சின்னத்துடன் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸின் பெயர் நீக்கப்படமாட்டாதெனவும் அவருக்கு கிடைக்கும் வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையுமெனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி காலமானதையடுத்து, வாக்குச்சீட்டில் பெயரிட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் fact seeker இது குறித்து ஆராய்ந்துள்ளது. இதன்போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

முஹம்மது இல்யாஸ் 1990ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

அதன் பின்னர் 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.

அதன்படி, நான்காவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட களமிறங்கிய முஹம்மது இல்யாஸ் கடந்த ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி காலமானதையடுத்து, அவருடைய வெற்றிடத்தை நிரப்புவதற்கு, வேரொருவரின் பெயரை முன்மொழியுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்ததது. எனினும் அதற்கான கால அவகாசம் கடந்த செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாயின் அந்த வேட்பாளர், முன்னாள் அல்லது தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டுமென்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 31 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

1(1) ஜனாதிபதி பதவிக்கென தேர்ந்தெடுக்கக்கூடிய தகைமை கொண்ட எந்தப் பிரஜையும் (அ) அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியினால் அல்லது (ஆ) அவர் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவராயின் அல்லது முன்னர் பதவி வகித்திருந்தால், வேறேதேனும் அரசியல் கட்சியினால் அல்லது ஏதேனும் தேர்தல் இடாப்பில் தமது பெயரைப் பதிந்துள்ளவரான ஒரு தேருநரால், அத்தகைய பதவிக்கான வேட்பாளராகப் பெயர் குறித்து நியமிக்கப்படலாம். 

அதன்படி, முஹம்மது இல்யாஸின் வெற்றிடத்துக்கு முன்னாள் அல்லது தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 

இவ்விடயம் தொடர்பாக மறைந்த முஹம்மது இல்யாஸின் மனைவி முகமது இல்யாஸ் ஜமீனாவிடம் fact seeker வினவியபோது, ​​உரிய வெற்றிடத்திற்கு தனது பெயரை முன்மொழிந்ததாகவும், எனினும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய தனக்கு போட்டியிட முடியாத காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கையை நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அல்லது தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எமது தரப்பில் இல்லாத காரணத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு யாரையும் பரிந்துரைக்கவில்லை என ஜமீனா தெரிவித்தார்.

இது குறித்து தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் fact seeker வினவியபோது, ​​தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரின் வெற்றிடத்துக்கு எவரையும் முன்னிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், ஒரு சுயேட்சை வேட்பாளரின் வெற்றிடத்தை முன்னாள் அல்லது தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரால் மட்டுமே நிரப்ப முடியும் என்றார். 

வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஐதுரூஸ் முஹம்மட் இல்யாஸின் பெயர் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்படமாட்டாதெனவும் குறிப்பிட்ட அவர், எவ்வாறாயினும் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸுக்கு கிடைக்கும் வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையுமெனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். 

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் ஊசி சின்னத்துடன் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் என்ற அவரது பெயர் இடம்பெற்றுள்ளது என்பதையும் அவருக்கான வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும் என்பதையும் fact seeker பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

No comments:

Post a Comment