"அனுரவுக்குப் பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்; ரணிலுடன் இணைந்தோர் ஒட்டைப் பைகளுடனே சென்றுள்ளனர்" - ரிஷாட் பதியுதீன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 18, 2024

"அனுரவுக்குப் பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்; ரணிலுடன் இணைந்தோர் ஒட்டைப் பைகளுடனே சென்றுள்ளனர்" - ரிஷாட் பதியுதீன்

உடன்பிறப்புக்களை நேசிக்காத ஒரு சிலரே மாற்றம் வேண்டுமெனக் கோரி, அனுரகுமாரவுக்குப் பின்னால் அலைகின்றனர் என்றும் அடுத்த ஆபத்தை அறியாமலேயே இவர்கள் இவ்வாறு அலைந்துதிரிவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புத்தளத்தில் (17) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

"முஸ்லிம் தாய்மார்களின் கருவறைகளில் பயங்கரவாதம் உயிர்ப்படைவதாக பாராளுமன்றத்தில் கூறியவர்தான் அனுரகுமார திஸாநாயக்க. ஈஸ்டர் தாக்குதல் காலங்களிலும், கொரோனா நேரங்களிலும் அனுரவின் சுயரூபத்தைக் காணமுடிந்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி எடுத்த நிலைப்பாட்டை நாம் மறக்க முடியாது. ஜனாஸாக்களை எரிப்பதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல உதவியவர்கள் இவர்கள். பயங்கரவாதத்துடன் எமது இஸ்லாத்தை இணைத்துப் பேசியவர்களும் இவர்கள்தான்.

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் எம்.பிக்கள் நாற்பது பேர், இன்றும் ஓய்வூதியம் பெறுகின்றனர். வாகன கோட்டா வசதிகளையும் இவர்கள் பெறுகின்றனர். வருடக்கணக்காக குற்றப்பயில்களை வைத்துக்கொண்டு அலையும் இவர்களால், ஒரு கள்வனையாவது பிடிக்க முடியவில்லை. இவர்களால் வீசா மோசடியைத் தடுக்க முடியவில்லை. கெஹெலியவுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் தேசிய மக்கள் சக்தி பேசவே இல்லை. இந்த லட்சணத்தில்தான் மாற்றம் வேண்டும் எனப் பிரச்சாரம் செய்கின்றனர்.

அனுபவமே இல்லாத கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு வருடங்களில் ஓடினார். அந்தக் காய்ச்சல் நீங்குவதற்குள் அனுரவின் காய்ச்சல் சிலரைப் பீடித்துள்ளது. அனுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும். சொந்தங்களை, உறவுகளைக்கூடக் கவனிக்காத, தொப்பி அணிந்த சிலரே, அனுரவுக்குப் பின்னால் வீர வசனம் பேசுகின்றனர்.

ரணிலுக்கு அளிக்கும் வாக்குகளை கடலில் கொட்டிவிடலாம். களப்போட்டியில் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலேயே உள்ளார்.

எழுபது வருடங்கள் எம்.பி இல்லாத அனுராதபுரத்துக்கு எம்.பியை பெற்றுக்கொடுத்தோம். புத்தளம் மாவட்டத்துக்கும் நாங்களே பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுத்தோம். இவர்கள், இப்போது ஓட்டைப் பைகளுடனே ரணிலுடன் இணைந்துள்ளனர். வாக்காளர்கள் எம்முடனே உள்ளார்கள். ஆறு தடவைகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் எதையும் செய்யவில்லை. நான்கு வருடங்களில் சஜித் பிரேமதாச செய்தவை ஏராளம். இதனால், இவரது வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அந்த வெற்றியில் நாங்களும் பங்காளராவோம்" என்றார்.

No comments:

Post a Comment