இந்நாட்டில் 109 வருடங்களுக்கு முன்னர், பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விசாரணையின் பின்னர் கொல்லப்பட்ட கெப்டன் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33(ஊ) உறுப்புரையின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த ஜனாதிபதி மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அப்போதைய இலங்கை ஆளுநரான ரொபர்ட் சாமஸ் இனால், 1915 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி, வெளியிடப்பட்ட பிரகடனத்தின் மூலம் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணைக்குப் பிறகு, 1915 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் திகதி, கெப்டன் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸூக்கு சட்டவிரோதமாக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவிப்பில் கெப்டன் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின்னர் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1888 ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி காலியில் பிறந்த ஹென்றி பெட்ரிஸ், பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கையில் வாழ்ந்த ஒரு முக்கிய சமூக ஆர்வலராகவும், அதேபோல் இலங்கை பாதுகாப்புப் படை மற்றும் கொழும்பு நகர பாதுகாப்பு படையில் பணியாற்றியதோடு இராணுவ கெப்டனாகவும் இருந்தார்.
பிரித்தானிய அதிகாரிகளால் 1915 இல் இனக் கலவரத்தைத் தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்பட்டார்.
No comments:
Post a Comment