அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன் : மாணவர்களின் நலன்கருதி இராஜினாமா செய்தேன் - பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Monday, August 12, 2024

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன் : மாணவர்களின் நலன்கருதி இராஜினாமா செய்தேன் - பங்களாதேஷ் முன்னாள் பிரதமர்

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.

இது கலவரமாக மாறியதால், கடந்த 5ஆம் திகதி பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். 

இந்நிலையில், இதுதொடர்பாக அவர் அளித்த நேர்காணலில் கூறியதாவது, பங்களாதேஷிற்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவை தங்களிடம் ஒப்படைக்க அமெரிக்கா வலியுறுத்தியது. அந்த தீவை அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தால், ஆட்சியில் நீடித்திருப்பேன். ஆனால், பங்களாதேஷின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தேன். தற்போது அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்துள்ளேன்.

நான் பேசியதை திரித்து கூறி மாணவர் போராட்டத்தை சிலர் தூண்டினர். போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பதை நான் விரும்பவில்லை. எனவே, மாணவர்களின் நலன்கருதி, பதவியை இராஜினாமா செய்தேன்.

பங்களாதேஷ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள். சமூக விரோதிகளை நம்பி ஏமாறாதீர்கள். அவர்களை எதிர்த்து நில்லுங்கள். அவாமி லீக் கட்சியினர், பொதுமக்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. 

நாட்டின் விடுதலைக்காக என் தந்தையும் (முஜிபுர் ரகுமான்), குடும்பத்தினரும் இன்னுயிரை தியாகம் செய்தனர். 

வங்கதேசம் மற்றும் நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன். இறைவன் அருளால் மீண்டும் வங்கதேசத்துக்கு திரும்பி வருவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment