விசாரணைகள் பக்கச்சார்பானவையாக அமையக்கூடாது : பொலிஸாருக்கு வலியுறுத்தியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 10, 2024

விசாரணைகள் பக்கச்சார்பானவையாக அமையக்கூடாது : பொலிஸாருக்கு வலியுறுத்தியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

(நா.தனுஜா)

அரசியலமைப்பின் பிரகாரம் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலில் பங்கேற்பதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, எனவே தேர்தல் காலப்பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் பக்கச்சார்பானவையாகவோ அல்லது குறித்தவொரு தரப்பினருக்கு சாதகமானவையாகவோ அமையக்கூடாது என வலியுறுத்தியிருக்கிறது.

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சுயாதீனமானதும், நியாயமானதுமான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டல்களை உள்ளடக்கி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்லேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரமும், இலங்கையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் பிரகடனங்களுக்கு அமைவாகவும் பொதுமக்களின் வாக்களிப்பதற்கான உரிமை, அரசியல் செயற்பாடுகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கான உரிமை, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலில் பங்கேற்பதற்கான உரிமை என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே தேர்தலை அண்மித்த காலப்பகுதியிலும், தேர்தல் நடைபெறும் தினத்தன்றும், தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியிலும் சகல பொலிஸ் அதிகாரிகளும் தேர்தல் வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

அதற்கமைய தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் தினத்தன்றும், தேர்தலின் பின்னரும் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளைப் பெறல் மற்றும் அவை பற்றிய விசாரணைகளை முன்னெடுத்தல் ஆகியவற்றின்போது அரசியலமைப்புக்கான 12 ஆவது சரத்து உரியவாறு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அச்சரத்தில் சட்டத்தின்முன் சகலரும் சமம் என்றும், சட்டத்தின்கீழ் பாதுகாப்பைப் பெறுவதற்கான அடிப்படை உரிமை சகலருக்கும் உண்டு என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் பக்கச்சார்பானவையாகவோ அல்லது குறித்தவொரு தரப்பினருக்கு சாதகமானவையாகவோ அமையக்கூடாது. அதேபோன்று அரசியல் காரணங்களால் அல்லது வேறு அழுத்தங்களால் இம்முறைப்பாடுகளை விசாரணையின்றிப் புறந்தள்ளுவது அரசியலமைப்பின் 12 ஆவது சரத்தை மீறும் செயலாகும்.

அதேவேளை வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் தொடர்பில் சட்டத்துக்கு அமைவாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சட்டங்களை எவ்வித பக்கச்சார்புமின்றி சகல வேட்பாளர்களுக்கும் ஒரேவிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அத்தோடு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கும்போது உரிய சகல சட்டங்கள் மற்றும் நடைமுறைகளும் பின்பற்றப்படவேண்டும்.

மேலும் சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல், பதாதைகளைக் காட்சிப்படுத்தல், வேட்பாளரின் புகைப்படத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின்போதும் அரசியலமைப்புக்கான 12 ஆவது சரத்து மீறப்படாதிருப்பதை பொலிஸார் உறுதிசெய்ய வேண்டும்.

அதுமாத்திரமன்றி எந்தவொரு வேட்பாளர் இவ்விதிகளை மீறி செயற்பட்டாலும், அவரது பதவி நிலை மற்றும் இயலுமை உள்ளிட்ட காரணிகளைப் புறந்தள்ளி, அவர்களுக்கு எதிராக ஒரேவிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment