(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, ரோஹன லக்ஷமன் பியதாஸ ஆகிய தரப்பினர்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுதந்திர கட்சியின் தலைமையகத்தை ஆக்கிரமித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிடுவது செல்லுபடியற்றது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பில் ஒரு அணி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பிறிதொரு அணி, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தரப்பில் பிறிதொரு அணி என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாக பிளவடைந்துள்ளது.
கொழும்பில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டதாவது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு கூட்டத்தை நடத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானம் எடுத்துள்ளோம்.
இதற்கமைய ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவும், கூட்டணியில் இணைந்துகொள்ளவும் தீர்மானித்துள்ளோம்.
அரசாங்கத்துடன் எவரும் இணைந்து கொள்ளக்கூடாது என சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு 2023.11.11 ஆம் திகதி ஏகமனதாக தீர்மானித்தது.
இந்த தீர்மானத்துக்கு எதிராக நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட தரப்பினர் அமைச்சுப் பதவிகளுக்காக அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்கள். அரச அதிகாரத்துடன் சட்டவிரோதமான முறையில் சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தை ஆக்கிரமித்துள்ளார்கள்.
நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திர கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளமை செல்லுபடியற்றது. கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த தீர்மானத்துக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை கொண்டு நிறைவேற்றுக்கு குழுக் கூட்டத்தை நடத்தி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏகமனதாக ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளமை முற்றிலும் தவறானது என்றார்.
No comments:
Post a Comment