இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த ராஜவரோதயம் சம்பந்தனுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (07) இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
திருகோணமலை தபால் கந்தோர் வீதியில் உள்ள அன்னாரது பூர்வீக இல்லத்தில் நண்பகல் 12 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து சமயக் கிரியைகள் நடைபெறவுள்ளதோடு பிற்பகல் 1.30 மணிக்கு அஞ்சலி உரைகள் இடம்பெறவுள்ளன. அஞ்சலி உரைகளைத் தொடர்ந்து பூதவுடல் தகனத்துக்காக பிற்பகல் 3.30 மணிக்கு இந்து மயானம் நோக்கி பேரணியாக கொண்டு செல்லப்படவுள்ளது.
சுமார் 1.30 மணிக்கு விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் அஞ்சலி உரைகள் இடம்பெறவுள்ளன. பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் உரை நிகழ்த்தவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதி லக்ஷ்மன் கிரியெல்லவும், பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநில தலைவர் ப.அண்ணாமலையும் இரங்கல் உரை நிகழ்த்தவுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களும் இரங்கல் உரை நிகழ்த்தவுள்ளனர். இன்றைய இறுதி நிகழ்வில் இலங்கைக்கான அயல் நாட்டு தூதுவர்கள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
மாலை 3.30 மணிக்கு அஞ்சலி உரைகள் நிறைவு செய்யப்பட்டு, தொடர்ந்து இறுதி ஊர்வலம் அஞ்சல் நிலைய வீதி, மின்சார நிலைய வீதியூடாக கிறீன் வீதி சந்தியை அடைந்து அங்கிருந்து கல்லூரி வீதிக்கு சென்று மீண்டும் சோனகர் தெரு ஊடாக இராஜவரோதயம் வீதியை அடைந்து, பின்னர் பிரதான வீதிக்கு சென்று அங்கிருந்து கடற்காட்சி வீதி ஊடாக ஏகாம்பரம் வீதியூடாக திருகோணமலை இந்துமயானத்தை சென்றடையும்.
அங்கு அன்னாரின் மூத்த மகன் ச.சஞ்ஜீவன் சிதைக்கு தீ மூட்டவுள்ளார்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி மற்றும் பெருந்தெரு விக்கினேஸ்வரா மகா வித்தியாலய சமூகத்தினர் பூதவுடலுக்கு விசேட அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இறுதி ஊர்வலம் செல்லவுள்ள வீதிகளில் மக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
91 வயதாகும் இராஜவரோதயம் சம்பந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் குன்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment