ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் காலத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத அரசாங்கத்தினால் அரசியலமைப்பில் 22ஆவது திருத்தத்தினை மேற்கொள்ளும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் முயற்சியானது புஷ்வானமாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தினை 5 வருடங்களாக உறுதிப்படுத்தும் நோக்குடன் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தல் தொடர்பில் அச்சமான மனோநிலை காணப்படுகிறது. அதனால் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். ஆனால் அதற்கான அவகாசம் தற்போது அவருக்கு இல்லாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. ஆகவே நிச்சயமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இவ்விதமான நிலையில், 22ஆவது திருத்தச் சட்டமூலத்தினை அடுத்த பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படவில்லை. அவ்வாறு உள்வாங்கப்பட்டாலும் கூட அரசாங்கத்தினால் அதனை நிறைவேற்ற முடியாது.
அரசாங்கத்தினை பொறுத்த வரையில் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சிகள் தற்போதைய நிலையில் அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கும் நிலைமையில் இல்லை.
ஆகவே, அரசாங்கத்தினால் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தினைக் கொண்டு வந்தாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது.
ஆகவே, 22ஆவது திருத்தச் சட்டம் வர்த்தமானி அறிவித்தலுடன் நிறுத்தப்பட்டுவிடும். அவ்வாறில்லாது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் அது புஷ்வானமாகும் நிலையே உள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களையும் எதிர்த்தரப்பு அரசியல் குழுக்களையும் திசைதிருப்புவதற்காகவே 22ஆவது திருத்தச் சட்டமூலத்தினை பயன்படுத்துகிறார் என்றார்.
No comments:
Post a Comment