(லியோ நிரோஷ தர்ஷன்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்று (21) ஞாயிற்றுக்கிழமையுடன் ஈராண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளமையை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பல கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கூட்டணியில் பொதுவான சின்னத்தில், பொது வேட்பாளராக 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கை வரலாறு காணாத அரசியல் மற்றும் பொருளாதார பெரும் நெருக்கடிக்களை எதிர்கொண்டது. இந்த நெருக்கடிகள் அதிகாரபூர்வமற்ற ஆட்சி மாற்றத்துக்கும் காரணமாகியது என்பது மறுக்க இயலாது.
மக்கள் ஆணையால் தெரிவு செய்யப்பட்ட அப்போதைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ, வன்முறை மிக்க மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாது நாட்டை விட்டு தப்பித்துச் சென்றார்.
இந்த அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் நாடு பெரும் அச்சுறுத்தல்களை எதிர்க்கொண்ட போது, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்தது.
2020 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தேசிய ஆசனத்தை மாத்திரம் பெற்று ஐக்கிய தேசிய கட்சி படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது.
நீண்ட நாட்கள் காத்திருப்புகளுக்கு பின்னர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய ஆசனத்தில் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமானம் செய்துக்கொண்டார்.
'அரகலய' அரச எதிர்ப்பு போராட்டங்கள் தளிர்விட்ட நாட்களாகவே அந்த காலப்பகுதி அமைந்தது. நாளுக்குநாள் நாட்டின் நிலைமை மோசமடைந்து இலங்கை முழுவதிலும் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று, இறுதியில் தலைநகர் கொழும்பு அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களின் களமாகியது.
நிலைமையை சீர்ப்படுத்த அரசாங்கம் பல வழிகளில் முயற்சித்த போதிலும் வெற்றியளிக்கவில்லை. மாறாக ஆட்சியாளர்களை பதவி விலகுமாறு மக்கள் வலுவாக கூறி நின்றனர். அப்போதைய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ முதலில் பதவி விலகி, அந்த பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்தார்.
இதனை தனிப்பட்ட தீர்மானம் என்பதை விட ஒட்டு மொத்த ராஜபக்ஷர்களின் தீர்மானத்தையும் தாண்டி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின முழுமையான அழுத்தமாகவும் இது அமைந்தது. ஏனெனில் இறுதி தருணத்தில் நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் ஆளும் கட்சியை நெருக்கடியான நிலைமைக்கு கொண்டு சென்றது.
இந்த நிலைமை அடுத்த நிலைக்கு செல்லாது தடுக்கப்பட வேண்டுமாயின், ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவர் என்பதை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ தீர்மானித்திருந்தனர். அதேபோன்று ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்திக்கோ அல்லது மக்கள் விடுதலை முன்னணிக்கோ சென்றுவிடக்கூடாது என்பதில் ராஜபக்ஷர்கள் இருந்தனர்.
ராஜபக்ஷர்களுக்கு ஏற்பட்ட இந்த சூழலே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கதிரையில் அமரவைத்தது.
'69 இலட்சம் மக்கள் ஆதரவை பெற்றவருக்கு நாட்டில் இடமில்லை, ஒரே ஒரு ஆசனத்தில் பாராளுமன்றம் சென்றவருக்கு நாடே சொந்தமானது' என்று சிங்கள நாளேடுகள் அன்று செய்திகளை பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment