“கடந்த இரண்டு வருடங்களை பின்னோக்கிப் பார்த்தால், நாட்டின் நிலைமை எல்லோருக்கும் தெரியும். மக்கள் வரிசையில் நின்று அவதிப்பட்டனர். நாடு தீப்பற்றி எரிந்தது. நாட்டில் தலைவர்களை தேடிப்பிடிப்பது கடினமாக இருந்தது. அப்போது ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்காக பிரதமர் பதவியை துணிச்சலாக ஏற்றுக் கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு, அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். அன்றிலிருந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி கடுமையாக உழைத்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்தார்.
“சட்டத்தை மதிக்கும் நாடு” எனும் தொனிப்பொருளில் வெல்லவாய பொது விளையாட்டரங்கில் நேற்று (6) நடைபெற்ற ஊவா மாகாண சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களின் வலுவூட்டல் செயலமர்வில் கலந்து கொண்டபோதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், நாட்டில் வரிசை யுகம் முடிவுக்கு வந்தது. சமுர்த்திக்கு பதிலாக, அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்பட்டது. எவ்வளவோ பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தபோதிலும், மாணவர்களுக்கான உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை போன்ற நிவாணைங்கள் வழங்கப்பட்டன.
இரண்டே ஆண்டுகளில் நாட்டை வழமை நிலையான நிலைக்குக் கொண்டுவர முடிந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும். பாதாள கோஷ்டிகளும் போதைப் பொருளும் நாட்டை சீரழித்து வருகின்றன. அதைக் கட்டுப்படுத்தவே இந்தத் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளோம்.
‘யுக்திய’ திட்டம் இந்நாட்டு மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. இந்த வருடம் ஜூன் 31 ஆம் திகதிக்குள் இந்த நாட்டில் பாதாள கோஷ்டிகள் மற்றும் போதைப் பொருள் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படும் என நான் அறிவித்தேன். பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே “யுக்திய” திட்டம் செயல்படுத்தப்பட்டது.
என்ன அழுத்தம் வந்தாலும் இந்த முன்னெடுப்பு நிறுத்தப்படாது. ஜனாதிபதியின் தலைமையில் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் இந்த நாட்டிலிருந்து பாதாள கோஷ்டிகளையும் போதைப் பொருளையும் இல்லாதொழிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். என்றார்”
இந்நிகழ்வில் மாகாண மகா சங்கத்தினர் தலைமையில் ஏனைய மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment