ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்தும் மனு தள்ளுபடி : வழக்கு கட்டணமாக 100,000 ரூபா வழங்க உத்தரவு : 5 வருடங்களே, அதில் மாற்றமில்லை - News View

About Us

About Us

Breaking

Monday, July 8, 2024

ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்தும் மனு தள்ளுபடி : வழக்கு கட்டணமாக 100,000 ரூபா வழங்க உத்தரவு : 5 வருடங்களே, அதில் மாற்றமில்லை

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகளினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவை இன்று பரசீலித்த உயர் நீதிமன்றம் இம்முடிவை அறிவித்துள்ளதோடு, இவ்வழக்கிற்காக ரூபா ஒரு இலட்சம் கட்டணம் அறவிடவும் முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, ஒரு மாதத்திற்குள் குறித்த வழக்குக் கட்டணத்தை செலுத்துமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமிந்திர தயான் லெனவ என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் இதேபோன்ற மனு தாக்கல் செய்யப்பட்டது என்றும், 2024 ஆம் ஆண்டில் தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அதே விடயங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், மனுவைத் தொடர போதுமான விடயங்கள் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் என அரசியலமைப்பு தெளிவாகக் குறிப்பிடுகிறது என்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு தீர்ப்பளித்தது.

இதேவேளை, இன்று (08) காலை வழக்கு விசாரணைகளின்போது, ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்களே என உயர் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் அறிவித்தார்.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை எனத் தெரிவித்த சட்டமா அதிபர், ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நிராகரிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெனாண்டோ, பி. பத்மன் சூரசேன, எஸ். துரைராஜா ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment