அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இருவரைத் தவிர ஏனையோர், கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை திட்டமிட்டு கட்டம் கட்டமாக முன்னெடுப்பதில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அத்துருகிரியவிலுள்ள பச்சை குத்தும் கலைக் கூடத்துக்குள் கடந்த (10) இரு ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ‘கிளப் வசந்த’ மற்றும் மற்றுமொரு நபர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளப் வசந்தவின் சொத்துக்கள் மற்றும் பணம் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேட்டபோது, பல கிளப்புகளை நடத்தி அவர் வருமானம் ஈட்டியிருப்பதாக அமைச்சர் பதிலளித்தார். இருப்பினும் இறக்கும்போது, கிளப் வசந்த நாடு முழுவதும் பலருக்கு கடனாளியாக இருந்தமை தற்போது நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எம்பிலிப்பிட்டிய மற்றும் அம்பலாங்கொடை பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து அமைச்சர் குறிப்பிடுகையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் பரவலாக இருப்பதால் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தடுக்க முடியாதென்று தெரிவித்த அமைச்சர், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருக்கும் இடங்கள் அல்லது நபர்களின் தகவல்களை பொதுமக்கள் அறிந்திருந்தால் அதிகாரிகளுக்கு தகவல் வழங்க வேண்டுமென்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment