நாட்டில் நான்கு பேரில் ஒருவருக்கு, பக்கவாதம் ஏற்படுவதாக இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக மூளை தினத்தையிட்டு எதிர்வரும் 22 ‘மூளை ஆரோக்கியம் மற்றும் தடுப்பு’ அனுஷ்டிக்கப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் காமினி பத்திரன இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.
வீட்டிலேயே இந்த நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என தெரிவித்த அவர் ஏதேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா? என அவதானித்து உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பக்கவாதம் என்பது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும், நாட்டில் 90 வீதமானவர்களில் பக்கவாத நோய் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு உடல் பருமன் மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணிகளும் பக்கவாதம் ஏற்படுவதற்கு வழிவகையாக அமையுமென சுட்டிக்காட்டினார்.
பக்கவாதத்துக்கு இப்போது மருந்து உண்டு. இது இரத்தக் கட்டியைக் கரைக்கும். எனவே, பக்கவாதத்தை வீட்டிலேயே அடையாளம் கண்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்வது மிகவும் அவசியம்.
பக்கவாதத்தை மூன்று அறிகுறிகள் மூலம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். வாய் ஒரு பக்கம் செல்வது,
கை அல்லது கால் உணர்வின்மை, மொழியைக் கையாள்வதில் சிக்கல் என்பவையே அவையாகும். அது மட்டுமின்றி இந்நோயால் கண்பார்வையைக் கூட இழக்கலாம். உடல் சமநிலையை இழக்கலாம்.
இவை அனைத்தும் உடனடியாக ஏற்படக்கூடியவையாகும். இவை ஏற்படுவதற்கு முன் அறிகுறி எதுவும் இருக்காது. ஆதலால்,அது நிகழும் நேரத்தைக் கவனிக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment