பிற்படுத்துவதற்கோ, வாக்கெடுப்புக்கு செல்வதற்கோ இடமில்லை - ராேஹன ஹெட்டியாரச்சி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 21, 2024

பிற்படுத்துவதற்கோ, வாக்கெடுப்புக்கு செல்வதற்கோ இடமில்லை - ராேஹன ஹெட்டியாரச்சி

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. என்றாலும் அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஜனாதிபதி தேர்தலை பிற்படுத்துவதற்கோ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கோ எந்த இடமும் இல்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (21) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் அவரசமாக அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதன் மூலம் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது, அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

என்றாலும் 22ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதி தேர்தலை பிற்படுத்துவதற்கோ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கோ எந்த இடமும் இல்லை என்பதை தெளிவாக கூற முடியும்.

சர்வஜன வாக்கெடுப்பு சட்டத்தின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பொன்று நீதிமன்றம் ஊடாக வந்தாலும் ஜனாதிபதி அது தொடர்பான கட்டளையை தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோன்று சர்வஜன வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி கட்டளை பிரப்பித்து ஒரு மாதத்துக்கு பின்னரே சர்வஜன வாக்கெடுப்புக்கு திகதி அறிவிக்கப்பட வேண்டும். அதனால் ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தற்போது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த வாரத்துக்குள் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். செப்டம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்.

அதனால் 22ஆம் திருத்தம் இந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதனை அனுமதித்துக் கொள்ள இருக்கும் கால இடைவெளியை பார்க்கும்போது, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல எந்த இடம்பாடும் இல்லை என்பது தெளிவாகிறது. அதனால் 22ஆம் திருத்தம் ஜனாதிபதி தேர்தலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. இது தொடர்பாக மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை.

அதேநேரம் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தெளிவாக இரண்டு தடவைகள் தீர்ப்பளித்திருக்கிறது. அதனால் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் என்பது உறுதியாக இருக்கிறது. அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பு திருத்தம் பாதிப்பாக அமையாது.

அவ்வாறான நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் தற்போதைய சூழலில் 22ஆம் திருத்தத்தை கொண்டுவராமல் இருந்திருக்க வேண்டும். இதனை அடுத்துவரும் புதிய அரசாங்கத்துக்கு இடமளித்திருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment