அரசியலமைப்பின் 18ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்துவந்த வரையறையற்ற அதிகாரங்களை சாதாரண ஜனநாயக முறைக்கு மாற்றும் வகையிலேயே 19ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்கும் நடவடிக்கை முறையாக இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் சனிக்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பின் 19ஆம் திருத்தம் தொடர்பில் நானே மிகவும் அறிந்தவன். ஏனெனில், நாங்கள் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில் அரசியலமைப்பின் 18ஆம் திருத்தத்தில் உள்ள ஜனாதிபதியின் வரையறையற்ற அதிகாரங்களை குறைத்து, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடமாக குறைக்க வேண்டும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 19ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் என முறையாக திருத்தி அமைக்கப்பட்டது.
அத்துடன் இன்று அதிகமானவர்கள் 18ஆம் திருத்தத்தை மறந்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தனக்கு தேவையான வகையில் அதிகாரங்களை குவித்துக் கொள்ளவே 18ஆம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நான் பொது வேட்பாளராக வந்து, 18ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இருந்த பாரியளவிலான அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
இதன்போது மைத்திரிபால சிறிசேனவின் 6 வருட ஜனாதிபதி பதவிக் காலத்தை 5ஆக குறைக்கவில்லை. மாறாக, ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருங்களில் இருந்து 5 வருடமாக குறைக்கப்பட வேண்டும் என்றே பாராளுமன்றத்தில் 19ஆம் திருத்தம் அனுமதிக்கப்பட்டதாக உயர் நீதிமன்றில் எனது சட்டத்தரணியாக ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரமே உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும்போது 6 வருடத்தை 5ஆக குறைக்க முடியும். அதற்கு மேல் குறைப்பதாக இருந்தால், அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன்போதுதான் அதிகமான சட்டத்தரணிகள் 6 வருட காலத்தை 7 வருடமாக அதிகரிப்பதாக இருந்தால் அதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டு்ம் எனவும் ஆனால் 6 வருடத்தை 5ஆக குறைக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தேவையில்லை என தெரிவித்தனர்.
எனவே, ஜனாபதியின் பதவிக் காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19ஆவது திருத்தமும் ஜனாதிபதியின் 6 வருட பதவிக் காலத்தை 5 வருடமாக குறைக்க வேண்டும் என்பதாகும் என்றார்.
No comments:
Post a Comment