நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும், முன்னுரிமை வழங்கி தீர்மானம் எடுப்போம் - நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, July 28, 2024

நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும், முன்னுரிமை வழங்கி தீர்மானம் எடுப்போம் - நாமல் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். நபர்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்மானத்தை எடுக்கப்போவதில்லை. கட்சியின் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கி உறுதியான தீர்மானத்தை எடுப்போம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசியலில் பாரிய சவால்களை எதிர்கொண்டோம். கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின்போது நாட்டு மக்களின் உயிரா ? அல்லது பொருளாதாரமா ? என்ற தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்தது.

பொருளாதாரத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அதற்கமைய கொவிட் பெருந்தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாத்தோம்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான பொருளாதார நெருக்கடி பாரிய அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பெற்ற கடன்களினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று ஒரு தரப்பினர் இன்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பெற்றுக்கொண்ட கடன்கள் சமூக கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எமது அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்களையே தனியார் மயப்படுத்த தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது.

பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எந்த புதிய அபிவிருத்தி திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை. மாறாக எமது அரசாங்கத்தின் அபிவிருத்தி கருத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. ஆகவே பொருளாதார கொள்கையில் இரு மாறுப்பட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை இவ்வாரம் வெளியிடுவோம். நபர்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்மானத்தை எடுக்க போவதில்லை.கட்சியின் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கி உறுதியான தீர்மானத்தை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment