சஜித் பிரேமதாச நாட்டைப் பாதுகாப்பதற்கு தமக்கு ஒத்துழைப்பு வழங்குவாரானால் தடை செய்யப்பட்டுள்ள அவரது ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்துவத்தை மீண்டும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டியில் தெரிவித்துள்ளார்.
நாட்டை தற்போது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, ஊழல்களுக்கு எதிராக போராட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கும் நிலையில் அந்தக் கட்சியுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க தாம் தயார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும், அதற்காக ஒரு நிபந்தனை உள்ளது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, சஜித் பிரேமதாச பாடசாலைகளுக்கு வழங்கும் பஸ்களை கொள்வனவு செய்வதற்கு பணம் வழங்கியது யார் என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் நடத்தப்பட்டுவரும் ‘இணைந்து வெற்றி பெறுவோம்’ என்ற மக்கள் பேரணி கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் கண்டியில் நேற்று நடைபெற்றதுடன் அங்கு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கண்டி பொது வர்த்தக சந்தை தொகுதிக்கு முன்பாக நேற்று நடைபெற்ற இந்த மக்கள் பேரணிக் கூட்டம் பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, லேவ்கே ரத்வத்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினராவார். லொஹானுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. எனினும் இன்று நானும் லொஹானும் ஒரே மேடையில் அமர்ந்துள்ளோம். நாட்டை பாதுகாக்கும் பலம் எம்மிடம் உள்ளது. தாய் நாட்டை அன்பு செய்வதால் எமது கட்சியையும் நாம் நேசிக்கின்றோம்.
அன்று சிறு வயதில் அனுர பண்டாரநாயக்கவுடன் விளையாடச் செல்லும்போது பண்டாரநாயக்க எம்முடன் பேசுவார். அவ்வாறுதான் நாம் வளர்ந்தோம்.
நாடு நெருக்கடிக்குள் வீழ்ந்த சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்வது? மலையக தமிழ் மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கிய பேச்சுவார்த்தையில் 1963 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகியோருடன் இந்தியாவுக்கு சென்று அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோம். அவர்கள் அங்கு நாட்டைப் பற்றி சிந்தித்து தீர்மானம் எடுத்தனர்.
1971 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தபோது அன்றைய கிளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிடம் உறுதியளித்தார். ஐக்கிய தேசியக் கட்சி எமக்கு அவ்வாறுதான் பயிற்சி வழங்கியுள்ளது.
நம் நாட்டைப் பற்றி சிந்தித்து செயற்படுவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுப்போம். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அழைப்பு விடுத்தால் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு ஜே.ஆர். எமக்கு கூறியுள்ளார். அதிகாரத்தை வழங்கும்போது அதனை பெற்றுக் கொள்ளாவிட்டால் அவர் ஐக்கிய தேசியக் கட்சியாளர் அல்ல.
முதலில் நாம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நான் இந்த நாட்டை மிக நெருக்கடியான காலத்தில் பொறுப்பேற்றேன். ஜே.ஆர். மற்றும் ரணசிங்க பிரமதாச ஆகியோருடன் செயற்பட்டதால் நான் அந்த நம்பிக்கையுடன் நாட்டைப் பொறுப்பேற்றேன். பொதுஜன பெரமுன எனக்கு ஒத்துழைப்பு வழங்கியது.
என்னிடம் எவ்வாறான சிறந்த கருத்துக்கள் இருந்தாலும் என்னால் தனியாக செயற்பட முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பல தடவைகள் ஆலோசனை வழங்கினேன்.
பொதுஜன பெரமுனவில் பெரும்பாலானோர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினர். அதன் பின்னர் அந்தக் கட்சி உடைந்து ஒரு தரப்பினர் சென்று விட்டனர். அரசருடன் பெரும்பாலானோர் இருந்தனர். அவரது சகாவுடன் சிறு அளவிலானோர் சென்று விட்டனர் இப்போது அரசரை கெட்டவர் என்றும் சகாவை நல்லவர் என்றும் கூறுகின்றனர். அது எவ்வாறு நடக்கும்?
ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் இந்த நாட்டில் ரணசிங்க பிரேமதாசவை மட்டுமே பாதுகாத்துள்ளேன். நம்பிக்கையில்லா பிரேரணையின்போது முன்னணியில் இருந்தது நான்தான். நான் வேறு எவரையும் பாதுகாக்கவில்லை.
எமது தாய் நாட்டை பாதுகாப்பதற்கு ஒன்றிணையுங்கள் என்றே நான் ஐக்கிய தேசியக் கட்சியில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். நான் தற்போது நாட்டை மீட்டெடுத்துள்ளேன்.
தற்போது ஊழல்களை ஒழிக்க வேண்டுமாம் நான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடத் தயாராகவுள்ளேன். ஆனால் ஒரு நிபந்தனை. சஜித் பிரேமதாச பாடசாலைகளுக்கு பஸ்களை கொள்வனவு செய்ய பணம் கொடுத்தது யார் என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும்.
நாம் ஒன்றிணைத்து இந்த பயணத்தை முன்னெடுப்போம். இதனைக் கைவிட முடியாது நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை வீழ்ச்சியடைய இடமளிக்காமல் பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்வோம்.
ஐக்கிய மக்கள் சக்தியைப் போன்றே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இந்த பயணத்தில் இணையுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment